Politics
த.வெ.க., அரசு 4 மாதங்களில் தோல்வி அடைந்துவிட்டது: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
திண்டுக்கல்:''த.வெ.க., அரசு 4 மாதங்களில் தோல்வி அடைந்துவிட்டது; இடைத்தேர்தலில் மக்கள் தக்க பதில் அளிப்பார்கள்'' என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது:
இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். தாராபுரம் த.வெ.க., வேட்பாளர் செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அ.தி.மு.க.,விற்கு துரோகம் செய்தவர்களுக்கு இடைத்தேர்தலில் பாடம் புகட்டப்படும்.
முதலமைச்சர் விஜய் 332 வாக்குறுதிகளை கொடுத்தார். தி.மு.க., 525 வாக்குறுதிகள் கொடுத்து நிறைவேற்றாமல் ஏமாற்றியது போல் த.வெ.க.,வும் மக்களை ஏமாற்றிவிட்டது.
விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. லஞ்சம் வாங்க மாட்டோம், யாரையும் வாங்கவும் விடமாட்டோம் என்று முதல்வர் விஜய் கூறினார். ஆனால் தி.மு.க., ஆட்சியை விட த.வெ.க., ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது. மேலும் சட்டம் ஒழுங்கு கெட்டு கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன.
முதல்வர் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றதாக கூறினார்கள். ஆனால் அங்கு சென்று கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் செயல்படும் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு லண்டனில் சென்று ஒப்பந்தம் செய்கிறார். அதை இங்கிருந்தே கையெழுத்திட்டிருக்கலாம்.
த.வெ.க., அரசு 4 மாதங்களில் தோல்வி அடைந்துவிட்டது. எனவே இடைத்தேர்தலில் மக்கள் தக்க பதில் அளிப்பார்கள் என்றார்.