Economy, business and finance
தனது சொந்த எம்.பி.க்களே ஆதரவு; ராகுல் ஏன் எதிர்க்கிறார்; யுபிஐ விவகாரத்தில் கேட்கிறது பாஜ

புதுடில்லி: யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வணிகர் தள்ளுபடி கட்டண (எம்டிஆர்) முறையை ஆதரித்த பார்லிமென்ட் நிதிக் குழுவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப. சிதம்பரம், கவுரவ் கோகோய் உட்பட 5 எம்.பி.க்கள் இருந்ததாக பாஜ குற்றம் சாட்டியுள்ளது.
2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நடக்கும் வணிக ரீதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டண முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இதனை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் என்று ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
எம்டிஆர் என்பது ஒரு வரி அல்ல; நுகர்வோர் நேரடியாக இந்தக் கட்டணத்தைச் செலுத்த மாட்டார்கள் என்று கூறி, மத்திய அரசு ராகுலின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸின் இரட்டை நிலையை விமர்சித்து பாஜ ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. பாஜ பார்லிமென்ட் எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தலைமையிலான பார்லி நிதிக் குழு, கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டண முறை பரிந்துரையை ஏற்றுக்கொண்டது.
இந்தக் குழுவில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய், மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களான மனிஷ் திவாரி, கிஷோரி லால், கோபிநாத் ஆகிய 5 பேரும் இடம் பெற்றிருந்தனர்.
இந்த பரிந்துரை அறிக்கை பார்லிமென்ட் குழுவால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அங்கு முன்னிலையில் இருந்த இந்த 5 காங்கிரஸ் எம்.பி.க்களும் எந்தவித எதிர்ப்போ, மாறுபட்ட கருத்தோ தெரிவிக்கவில்லை; இந்த புதிய கட்டண முறைக்கு தனது ஆதரவான நிலைப்பாட்டை பதிவிட்டு இருந்தனர்.
சொந்தக் கட்சியின் மூத்த பொருளாதார நிபுணர்களும், எம்.பி.க்களும் பார்லிமென்ட் குழுவில் ஆதரித்த ஒரு கொள்கையை, தற்போது ராகுல் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பதாக பாஜ கடுமையாக சாடியுள்ளது.தனது சொந்த எம்.பி.க்களே பார்லிமென்டிற்குள் ஆதரித்த ஒன்றை ராகுல் ஏன் எதிர்க்கிறார்? என்றும் பாஜ வட்டாரங்கள் கேள்வி எழுப்பின.