Economy, business and finance
ஒன்றிய அரசின் யுபிஐ கட்டண அறிவிப்பு; உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்ட, ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகரீதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டண அறிவிப்பை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய நிதியமைச்சகம் செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் வெளியிட்ட அறிவிப்புகளின்படி, ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை வணிகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பு அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், அரசின் இந்த நடவடிக்கை விலைவாசி ஏற்றத்தை அதிகரிக்கும் என்றும், அது பொதுமக்களின் மீது திணிக்கப்படும் என்று கூறி எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘‘புதிய யுபிஐ கட்டணங்களால் ஏற்படும் இந்தக் கூடுதல் செலவை வணிகர்கள், நுகர்வோர் மீது சுமத்துவர். எனவே, இது இறுதியாகச் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)