பட்டப்பகலில் 3 வாலிபர்களை வெட்டி கொல்ல முயற்சி புழல் காவல் நிலையம் எதிரே ரவுடி கும்பல் அட்டகாசம்
புழல்: புழல் காவல் நிலையம் அருகே பட்டப்பகலில், காரில் சென்ற மூன்று வாலிபர்களை வழிமறித்து, பட்டாக்கத்திகளால் வெட்டி கொல்ல முயன்ற ரவுடி கும்பலை, புழல் போலீசார் தேடி வருகின்றனர்.
திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் லோகேஷ், 22. தன் நண்பர்களான ரெட்டேரியைச் சேர்ந்த ஜீவா, 22, மற்றும் ‘மொட்டை’ கார்த்திக் ஆகியோரை, தன் ‘டட்சன்’ காரில் அழைத்துக்கொண்டு, மாதவரம் நோக்கி, நேற்று சென்று கொண்டிருந்தார்.
புழல், ஜி.என்.டி., சாலையில் மாலை 4:30 மணிக்கு சென்றபோது, பின்னால் ‘டியோ’ ஸ்கூட்டரில் பட்டாக்கத்திகளுடன் வந்த ஐந்து பேர், காரை நிறுத்தும்படி கூறினர்.
கத்திகளை பார்த்து பீதியடைந்த லோகேஷ், காரை நிறுத்தாமல் ஓட்டினார். ஆனால் அவர்கள், பின்னால் சத்தமிட்டபடி துரத்தி கொண்டே வந்தனர்.
புழல் காவல் நிலையம் எதிரே ஜி.என்.டி., சாலையில் காரை வழிமறித்த அவர்கள், காரில் இருந்தோரிடம் ‘இதில் யார் அபி’ என கேட்டபடியே, பட்டாக்கத்திகளால் வெட்ட பாய்ந்தனர். உஷாரான மூவரும், காரின் கதவை திறந்து, மரண பயத்தில் ஓடி, காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
மூவரும் தப்பித்த ஆத்திரத்தில், கார் கண்ணாடியை உடைத்துவிட்டு, அந்த ஐந்து பேரும் அங்கிருந்து ஸ்கூட்டரில் கிளம்பினர். புழல் கேம்ப் சந்திப்பில் இருந்து, இருவர் ஸ்கூட்டரிலும், மூவர் ஓட்டமாகவும் வெவ்வேறு வழிகளில் தப்பினர். லோகேஷ் புகாரையடுத்து, மூவரை வெட்ட வந்த ஐந்து ரவுடிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.
காரை ஓட்டி வந்த லோகேஷ் கூறுகையில், ‘‘புழலில், ஜீவா மற்றும் கார்த்திக்கை காரில் ஏற்றி, மாதவரம் சென்று கொண்டிருந்தேன். பின்னால் விரட்டி வந்த ஐந்து பேர் கும்பல், எங்களை கத்தியால் வெட்ட பாய்ந்தது. இதில் எனக்கு லேசான காயம் ஏற்பட்டது. எனினும், காவல் நிலையத்தில் புகுந்து தப்பித்தோம். எதற்கு எங்களை வெட்ட வந்தனர் என தெரியவில்லை,’’ என்றார்.
திருவொற்றியூரில் போலீசாரிடம் புகார் தெரிவித்த அடுத்த நாளே, ரவுடிகளால் வாலிபர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது புழல் சிறை அருகே, அதுவும் புழல் காவல் நிலைய வாசலிலேயே மூன்று பேரை கொல்ல முயன்ற சம்பவம், மக்களிடம் பீதியை கிளப்பியுள்ளது.