Politics
“பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக்கட்டண உதவி வழங்கவேண்டும்..” அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனியார் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
தனியார் கல்லூரிகளின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு கல்விக் கட்டண (Annual Tution Fees) உதவித் தொகையை 4 மடங்கு முதல் 8 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப் பட்டுள்ள உதவித்தொகை உயர்வு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கட்டண உதவி மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதியாகும்.
பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் வகையில், அரசு கலைக் கல்லூரிகளில் பயில இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களின் கட்டணச் சுமையை ஏற்றுக் கொள்ளும் நோக்குடன் ஆண்டு கல்விக் கட்டண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை கடந்த 2011ஆம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படாத நிலையில், இப்போது பி.எஸ்சி, பி.காம் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவி ரூ.2850லிருந்து, 295% உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.ஏ மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.1350லிருந்தும், எம்.எஸ்சி, எம்.காம் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2850லிருந்து ரூ.12,000 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
பி.ஏ. மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1350 உதவித் தொகை 733% உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக வழங்கப்படும். பி.பி.ஏ மாணவர்களுக்கும் இதே தொகை வழங்கப்படும். இதுதவிர மேலும் 11 இளநிலை பட்டப்படிப்பு மானவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.11,250 வீதமும், 10 முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வீதமும் கல்விக் கட்டண உதவியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதையும், பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டண உதவித் தொகை கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாததையும் கனக்கில் கொண்டு பார்க்கும் போது இந்த உதவித்தொகை உயர்வு நியாயமானதும், தேவையானதும் ஆகும்.
