1964 புயலையே தாங்கிய தேவாலயம்... தனுஷ்கோடியில் இன்று இடிந்து விழுந்த ஒரு பகுதி

தனுஷ்கோடியில் 1964 புயலில் சேதமடைந்த தேவாலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அழியும் நிலையில் உள்ள இந்த தேவாலயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் 1964-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் புயலில் சேதமடைந்த பழமையான தேவாலயத்தின் ஒரு பகுதி தற்போது இடிந்து விழுந்துள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படும் இந்த தேவாலயம் மேலும் சேதமடைந்து அழியும் நிலையில் இருப்பதால், வரலாற்றுச் சின்னமாக விளங்கும் இதனைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1900-களில் தனுஷ்கோடி முக்கியமான வர்த்தக நகரமாக விளங்கி வந்தது. அப்போது அங்கு வசித்த ஆங்கிலேயர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் வழிபாட்டிற்காக பவளப்பாறைக் கற்களால் தேவாலயமும், விநாயகர் கோவிலும் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 1964-ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட மிகப்பெரிய புயலில் ஒட்டுமொத்த நகரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு அழிந்தது. இந்த புயலின்போது தேவாலயத்தின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. இருப்பினும், பவளப்பாறைக் கற்களால் கட்டப்பட்டிருந்ததால் கட்டிடத்தின் ஒரு பகுதி உறுதியுடன் நின்று, அந்தப் பேரழிவின் எச்சமாக இன்றளவும் காணப்படுகிறது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இந்த தேவாலயத்தைக் காணவும், தனுஷ்கோடியில் புயலால் அழிந்த பகுதிகளை பார்வையிடவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, 2017-ஆம் ஆண்டு அரிச்சல்முனை கடற்கரை வரை சாலை அமைக்கப்பட்ட பிறகு, தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடிக்கு வருகை தருகின்றனர். அவர்கள் புயலில் அழிந்த பழைய தபால் நிலையம், ரயில் நிலையம், விநாயகர் கோவில், தேவாலயம், மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்களின் எச்சங்களை பார்வையிட்டு செல்கின்றனர்.
பவளப்பாறைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம் பல ஆண்டுகளாக இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. மேலும், பவளப்பாறைக் கற்கள் சில இடங்களில் பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அவை ராமர் பாலத்துடன் தொடர்புடையவை எனக் கூறி சிலர் எடுத்துச் சென்று விற்பனை செய்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தனுஷ்கோடியில் அவ்வப்போது வீசும் பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கனமழை காரணமாக தேவாலயம் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. தற்போது அதன் இடதுபுறப் பகுதி முழுவதும் இடிந்து விழுந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள கட்டிடமும் மேலும் சேதமடைந்து அழியும் அபாயத்தில் உள்ளது.
1964-ஆம் ஆண்டு புயலின் பேரழிவை நினைவுகூரும் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் இந்த தேவாலயத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வரலாற்றின் எச்சமாக இருக்கும் இந்த கட்டிடத்தை பாதுகாத்து, எதிர்கால தலைமுறையினரும் பார்வையிட்டு அதன் வரலாற்றை அறியும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
