Crime, law and justice
நீதிமன்றத்தில் சமரச தீர்வு முகாம்: அடுத்த மாதம் துவங்குகிறது
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வுக்கான முகாம் அடுத்த மாதம் துவங்கி டிசம்பர் வரை நடைபெற உள்ளது.
புதுச்சேரி மாவட்ட சமரச தீர்வு மைய நீதிபதி அம்பிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசம் மூலம் தீர்த்து வைப்பதை நோக்கமாக கொண்டு, தேசத்திற்கான சமரசம் 3.0 என்ற தலைப்பில் அடுத்த மாதம் முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நாடு தழுவிய சமரச தீர்வு முகாம் அந்தந்த மாவட்ட சமரச தீர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
அதன்படி, புதுச்சேரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வுக்கான முகாம் அடுத்த மாதம் அக்., 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. முகாமில், வழக்குகளை விரைவாக முடித்து கொள்ளலாம். நேரமும், செலவும் மிச்சமாகும். ரகசியம் பாதுகாக்கப்படும். இரு தரப்பினர்களிடையே பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய தீர்வை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சமரசத்தின் மூலம் தீர்வு காணக்கூடிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட வழக்காடிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.