‘பாரத ரத்னா’ விஞ்ஞானி ராவ் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கமா?
பெங்களூரு: ‘பாரத ரத்னா’ விருது பெற்ற பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவின் பெயரில் எழுத்துப் பிழை இருப்பதாக கூறி, பெங்களூருவில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், அதை மாவட்ட தேர்தல் அலுவலர் மறுத்துள்ளார்.
அறிவியல் துறையில் சிறப்பான பங்காற்றியதற்காக நாட்டின் மிக உயரிய, ‘பாரத ரத்னா’ விருது பெற்றவர் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ், 92. கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர்.
கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து முடிந்துள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஒரு கோடி வாக்காளர்கள் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரம் சட்டசபை தொகுதியில் வாக்காளராக உள்ள பேராசிரியர் சி.என்.ஆர்.ராவின் பெயரில் முரண்பாடு இருப்பதாக கூறி அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்த செய்தியை பெங்களூரு நகர்ப்புற மாவட்ட தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:
பேராசிரியர் சி.என்.ஆர்.ராவுக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. வாக்காளர் பதிவு படிவங்கள் சி.என்.ஆர்.ராவ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நேரில் வழங்கப்பட்டன. தேவையான விபரங்களும் முறையாக பூர்த்தி செய்யப்பட்டன.
கடந்த 2002 பட்டியலில் அவர் பெயர் ‘ராமா’ என பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது, ‘புரொப். சி.என். ராவ் எம்.,’ என்ற பெயரில் இருந்தது. முரண்பாடு காணப்பட்டாலும் மதிப்புமிக்க நபர் என்ற அடிப்படையில், அவரது பெயரை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கும்படி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பரிந்துரை செய்துள்ளார். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.