பிரஜ்வல் அறையில் மொபைல் போன்: குமாரசாமி சந்தேகம்

ஹாசன்: ''பிரஜ்வல் ரேவண்ணா இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ளார். கே.பி.எஸ்.சி., - நைஸ் விவகாரம் வரும்போது, அவர் இருக்கும் சிறையில் மொபைல் போன் கண்டெடுக்கப்பட்டது எப்படி?,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுராவின் மாவினகெரே மலை அடிவாரத்தில், தன் தாயாரின் நினைவிடத்தில் நேற்று குமாரசாமி அஞ்சலி செலுத்தினார்.
அமெரிக்கா சென்றிருந்த நான், இரண்டு நாட்களுக்கு முன் தான் திரும்பினேன். அமெரிக்கா செல்லும் முன், கே.பி.எஸ்.சி., முறைகேடு, பிடதி டவுன்ஷிப், நைஸ் முறைகேடுகள் என பல பிரச்னைகள் எழுப்பியிருந்தேன்.
எனது எதிரிகள் என்னை பற்றி என்ன பேசினாலும், கோபப்பட மாட்டேன். எந்தவித அச்சமோ, தயக்கமோ இன்றி ஆவணங்களை ஆதாரங்களுடன் மக்கள் முன் வைப்பேன். ஆவணங்களின்றி நான் பேச மாட்டேன்.
பி.எம்.ஐ.சி., எனும் பெங்களூரு மைசூரு உட்கட்டமைப்பு காரிடார் ஒப்பந்ததாரர், முதல்வரை சந்திக்கும் புகைப்படங்களை பார்த்தேன். ஒரு குறிப்பிட்ட தொலைகாட்சி, முதலில் முதல்வரை சந்தித்த பின், ஒரு கதையை உருவாக்குகிறது.
காலம் அனைத்தையும் தீர்மானிக்கும். எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதை யார் அரங்கேற்றுகின்றனர் என்பதும் எனக்கு தெரியும். கடந்த 10 நாட்களாக யார் துாக்கத்தை இழந்தனர் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
அரசியல் பொறாமையால் நான் எதிர்க்கவில்லை. நேர்மையான நிர்வாகத்தை ஆதரிப்பேன். அதேவேளையில், அதிகார துஷ்பிரயோகம் குறித்து மவுனமாக இருக்க மாட்டேன்.
பிரஜ்வல் ரேவண்ணா இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ளார். கே.பி.எஸ்.சி., - நைஸ் விவகாரம் வரும்போது, அவர் இருக்கும் சிறையில் மொபைல் போன் கண்டெடுக்கப்பட்டது எப்படி?
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பல முறைகேடுகள், ஊழல்கள் குறித்து பேசுவதில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கு இடமில்லை. ஜனநாயகத்தின் நான்கு துாண்களில் ஒன்று தள்ளாடினாலும், அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பை அவமதிப்பதாகும்.
குறிப்பிட்ட சமுதாயத்தினர் தான் ஆட்சியை நடத்த வேண்டும் என்று நினைப்பவன் நானல்ல. யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்களுக்காக நேர்மையாக செயல்படுவோருக்கு முழுமையாக ஆதரவளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.