Politics
50 வருஷமாக தீராத மலைக்கிராம மக்களின் கண்ணீர்...
பல தலைமுறையா இங்கேதான் வசிக்கிறோம். தினை, கிழங்கு பயிர் பண்ணுறோம்; காட்டுல கிடைக்கிற தேனையும் உணவா பயன்படுத்துறோம்

முறையிட்ட ஜூ.வி; களத்துக்கு வந்த அமைச்சர்!
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதிக்குள், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகிறார்கள் காணி இன மக்கள். காலங்கள் மாறிவிட்டன, ஆட்சிகள் மாறிவிட்டன. ஆனால், இவர்களின் வாழ்க்கையில் மட்டும் பெரிய மாற்றம் இல்லை. இன்றும் அடிப்படை வசதிகளுக்காக ஏங்கித் தவிக்கிறார்கள். `‘எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குக் கூடுதல் கட்டடங்கள் வேண்டும்... எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு, திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்... எனக் கடந்த 50 ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைத்துவருகிறோம். ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. நீங்களாவது எங்களின் கோரிக்கைகளைக் கேளுங்கள்...” என்று, தங்கள் ஆதங்கத்தை நமது அலுவலகத்துக்குக் கடிதமாக அனுப்பியிருந்தார்கள் காணி மக்கள்.
அந்த மக்களின் குறைகளை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். கவனமாகக் கேட்ட அவர், “உடனடியாக நானே நேரில் வந்து அந்த மக்களைச் சந்தித்துப் பேசுகிறேன்” என்றார். இதற்காக, கடந்த 12-ம் தேதி காலை 8 மணிக்கு சின்ன மைலாறு, பெரிய மைலாறு, காணிக் குடியிருப்பு, அங்குள்ள பள்ளிக்கூடம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்றார். அவருடன், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை, வனத்துறை அதிகாரிகளும் சென்றனர்.
சின்ன மைலாறு பகுதியில் ‘மூட்டுகாணி’ என அழைக்கப்படும் ஊர்த் தலைவர் வேலுச்சாமி, அமைச்சரிடம் கோரிக்கைவைத்துப் பேசுகையில், “பல தலைமுறையா இங்கேதான் வசிக்கிறோம். தினை, கிழங்கு பயிர் பண்ணுறோம்; காட்டுல கிடைக்கிற தேனையும் உணவா பயன்படுத்துறோம். அகத்தியர் வாழ்ந்த இந்த மூலிகை மலையில எந்த மூலிகை எங்க, எந்தக் காலத்துல கிடைக்கும்னு எங்களுக்குத் தெரியும். அதனால சித்த மருத்துவ மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எங்களைத் தேடி வர்றாங்க; எங்களால முடிஞ்ச உதவியைச் செய்யிறோம்.
மலைப்பகுதியில கிடைக்கிற மிளகு, தாணிக்காய், கொடாம்புளி, நெல்லிக்காய், கடுக்காய், பதிமுகம் பட்டை, பலா, தேன் உள்ளிட்ட பொருள்களை மதிப்புக்கூட்டி விக்க சந்தை வசதி ஏற்படுத்தித் தரணும். அரசு சொன்ன 58 வீடுகளையும் சீக்கிரம் கட்டித் தரணும்; வாகன வசதியும் வேணும். எங்க பிள்ளைகள் படிக்கிற உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியா தரம் உயர்த்தினாதான் படிப்பைப் பாதியில நிறுத்துறதைத் தடுக்க முடியும். பள்ளிக்குக் கூடுதல் கட்டடங்களும், உடற்கல்வி ஆசிரியரும் நியமிச்சுத் தரணும்” என்றார்.
தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர் வன்னி அரசு, ஆற்றைக் கடக்கும் பகுதியில் கட்டப்பட்டுவரும் இரும்புப் பாலத்தைப் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து காணி குடியிருப்புப் பகுதிக்குச் சென்று, மரத்திலிருந்து விழுந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட செந்தில்குமாரைச் சந்தித்தார். அவரின் மகன் மனோவின் மேற்படிப்புக்காக, மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு ஐ.டி.ஐ-யில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
பின்னர் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடிய அமைச்சர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முருகன், இனியாவுக்கு தோல் உரிதல் நோய் இருப்பதை அறிந்து, அவர்களை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “பள்ளிக்குக் கூடுதல் கட்டடம், விடுதி, உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட வசதிகள் விரைவில் செய்து தரப்படும். நல்ல உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் நன்றாகப் படித்து எதிர்காலத்தில் அதிகாரிகளாக உயர வேண்டும்” என்றார்.
இந்தப் பயணம் குறித்து நம்மிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “காணி பழங்குடியின மக்களின் தேவைகள், அரசால் படிப்படியாக நிறைவேற்றப்படும். ஆற்றைக் கடக்க அமைக்கப்படும் இரும்புப் பாலம் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும். பள்ளிக்குக் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணி உடனடியாகத் தொடங்கப்படும். மக்களின் பொருள்களைச் சந்தைப்படுத்தவும், மேல்நிலைப் பள்ளியை தரம் உயர்த்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 50 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி இந்த மக்கள் வாழ்வது அவமானம். வீடு, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சலுகை அல்ல; அவர்களின் உரிமை. அதை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும். மக்களை பாதிக்கும் எந்த விஷயத்தைக் கொண்டு வந்தாலும், அரசு அதைச் செய்து முடிக்கும்” என்றார்.
களத்துக்கு வந்து, மக்கள் குறைகளைக் கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்ய உத்தரவிட்ட அமைச்சர் வன்னி அரசுக்கு காணி நிலம் சார்பில் வாழ்த்துகள்!
