காதலித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்து தாக்கிய வாலிபர் கைது
மதுரவாயல்: காதலித்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த, 22 வயது வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த, 20 வயது பெண். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ரமணன், 22 என்பவரை காதலித்து வந்துள்ளார்.
கடந்த மே மாதம் இருவரும் வேலை தேடி சென்னை வந்தனர். அந்த பெண்ணுக்கு மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
ரமணன் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், அந்த பெண் தன்னுடன் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.
கடந்த மாதம் 10ம் தேதி மீண்டும் சென்னை வந்த ரமணன், அந்த பெண் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று வேலையை விட்டு விட்டு தன்னுடன் ஊருக்கு வருமாறு அழைத்தார்.
அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதையடுத்து, கடந்த மாதம் 28ம் தேதி ரமணன் மீண்டும் அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று, தன்னுடன் ஊருக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் அவதுாறாக பேசி பெண்ணை கையால் தாக்கி கீழே தள்ளினார்.
அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்ததும், அந்த பெண்ணுக்கு தான் வாங்கி கொடுத்த மொபைல் போனை பறித்து கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமணனை நேற்று கைது செய்தனர்.