Lifestyle and human interest
ஏ.டி.எம்., இயந்திரத்தை திருடி ரூ.12 லட்சம் கொள்ளை :முகமூடி நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, ஏ.டி.எம்., இயந்திரத்தை திருடி, 12.54 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த முகமூடி அணிந்த மர்ம நபர்களை பிடிக்க, ஆவடி போலீஸ் துணை கமிஷனர் தலைமையில், 38 போலீசார் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், கூடப்பாக்கம் என்ற பகுதியில், 'ஹிட்டாச்சி' என்ற தனியார் ஏ.டி.எம்., மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், இங்கு பணம் எடுக்க வந்த மக்கள், ஏ.டி.எம்., இயந்திரம் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின், அவர்கள் அளித்த தகவலின்படி, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆவடி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்படி, துணை கமிஷனர் வினோத்சாந்தாராம் தலைமையில், 38 பேர் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
ஏ.டி.எம்., மையம் அமைந்துள்ள கூடப்பாக்கம் பகுதிக்கு, செப் 5 அதிகாலை 3:00 மணியளவில், 'மாருதி' வேனில் முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 6 பேர், இயந்திரத்தை பெயர்த்தெடுத்து, வேனில் ஏற்றிச்சென்றுள்ளனர்.
பின், அந்த வேனை அரண்வாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரி அருகே செல்லும், கிருஷ்ணா கால்வாய் பகுதியில் நிறுத்தி, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, 12 லட்சத்து 54 ஆயிரத்து 700 ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
மாருதி வேனில் சென்ற மர்ம நபர்கள், தண்டலம் பகுதியில் வேனை நிறுத்தி விட்டு, அங்கிருந்து மூன்று இருசக்கர வாகனங்களில் தப்பியுள்ளனர்.
உடைக்கப்பட்ட ஏ.டி.எம்., இயந்திரம் மற்றும் மாருதி வேனை கைப்பற்றி, தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில், போலீசார் இல்லாத ஏ.டி.எம்., மையத்தை உடனடியாக மூட வேண்டுமென, வங்கிகளுக்கு ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.