Lifestyle and human interest
ஏ.டி.எம்., மிஷினை காணோம் ரூ.10 லட்சம் வரை அபேஸ் :கூடப்பாக்கத்தில் பரபரப்பு
திருவள்ளூர்: கூடப்பாக்கத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மிஷின் திருடு போனது, அப்ப-குதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 10 லட்சம் ரூபாய் வரை இருந்திருக்கலாம் என, வங்கி தரப்பில் கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அருகே கூடப்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 'ஹிட்டாச்சி' என்ற தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மிஷின் உள்ளது. நேற்று மதியம் பணம் எடுக்க வந்த மக்கள், ஏ.டி.எம்., மிஷின் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். ஏ.டி.எம்., மிஷினில் 10 லட்சம் ரூபாய் வரை இருந்திருக்கலாம் என, வங்கி தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள 'சி.சி.டி.வி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு, இரவு நேர காவலர் நியமிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இதற்கு முன் ஏ.டி.எம்., மிஷினை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. தற்போது, ஏ.டி.எம்., மிஷினை தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் ரோந்து பணி உள்ளிட்ட எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காததே, கொள்ளை சம்பவத்திற்கு முக்கிய காரணம்' என்றனர்.