ஏற்காடு மலைப்பாதையில் திடீரென சரிந்து விழுந்த பாறை.. போக்குவரத்து பாதிப்பு.. வாகன ஓட்டிகள் அவதி!

ஏற்காடு மலைப்பாதையில் 2 இடங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதைத்தொடர்ந்து நேற்று இரவு 9 மணிக்கு ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பலத்த மழை பெய்ய தொடங்கி இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. நேற்று இரவு பெய்த பலத்த மழையால் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 13 மற்றும் 14 வது கொண்டை ஊசி வளைவிற்கு இடையில் சாலையோரத்தில் லேசான நிலச்சரிவு ஏற்பட்டு சிறிய மரம் மற்றும் மண் சாலையின் குறுக்கே விழுந்தது. தகவலறிந்த ஏற்காடு நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்த மரம் மற்றும் கல், மண்ணை அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் மலைப்பாதையில் உள்ள 40 அடி பாலம் அருகில் பாறை உருளும் பகுதி என்று நெடுஞ்சாலை துறையினரால் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் 50 அடி உயரத்தில் இருந்து ராட்சத பாறை ஒன்றும் அதனுடன் சில சிறிய பாறைகளும் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த சமயத்தில் சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
