Crime, law and justice
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,962 வழக்குகளுக்கு தீர்வு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 4,962 வழக்குகளில், 39.59 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம், சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 10 தாலுகா நீதிமன்றங்களில் நடந்தன.
திருவள்ளூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஜூலியட் புஷ்பா தலைமை வகித்தார்.
மாவட்டம் முழுதும் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது.
இதற்காக, மாவட்டம் முழுதும் 23 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. திருவள்ளூரில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை, முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைவருமான ஜூலியட் புஷ்பா துவக்கி வைத்தார்.
இதில், 5,212 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு, 4,962 வழக்குகள் முடிக்கப்பட்டு, 39 கோடியே 59 லட்சத்து 4,193 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
