Crime, law and justice
மக்கள் நீதிமன்றம் மூலம் 1149 வழக்கு தீர்வு
சிவகங்கை,செப்.13- சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1149 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.21
சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1149 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.21 கோடி வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.
சிவகங்கை மாவட்டத்தில் 14 மக்கள் நீதிமன்றங்கள் நேற்று அமைக்கப்பட்டது. மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்கு, சமரச குற்றவியல் வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டது. பட்டியல் வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிபதி நாகராஜன், போக்சோ நீதிபதி ரோகிணி, குடும்ப நல நீதிபதி பசும்பொன் சண்முகையா, சார்பு நீதிபதி பாண்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி அனிதா கிறிஸ்டி, கூடுதல் மகிளா நீதிபதி வைஷ்ணவி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதர்ஷினி, வழக்கறிஞர் ஜானகிராமன், செந்தில்குமார், செந்தில்குமரன், பாண்டிக்கண்ணன் வழக்குகளை விசாரித்தனர். தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 72 குற்றவியல் வழக்கு, 303 காசோலை மோசடி வழக்கு, 299 வங்கி கடன் வழக்கு, 419 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்கு, 325 குடும்பப் பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்கு, 941 சிவில் சம்பந்தப்பட்ட வழக்கு, 1451 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 3810 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1080 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.20 கோடியே 6 லட்சத்து 8 ஆயிரத்து 788 வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.
வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 1016 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 69 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.95 லட்சத்து 16 ஆயிரத்து 888 வரை வங்கிகளுக்கு வரவானது. ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.
