Politics
தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள்; உறுதிமொழி ஏற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் இன்று (17-09-26) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலாயத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ‘சமத்துவம், சகோதரத்துவத்திற்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன் என்றும் சமூக நீதியை அடித்தளமாக கொண்ட சமூதாயத்தை அமைக்க பயணம் தொடரும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்க அவரை பின் தொடர்ந்து திமுக நிர்வாகிகள், தொண்டர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)