Politics
பெரியார் பிறந்த நாள்: முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து

பெரியார் பிறந்தநாளில் முதல்வர் விஜய், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சமூகநீதி போராளி தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்! தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்! வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம் பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன. ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது. பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன. ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட! வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள். “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது. பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆயிரம் ஆண்டுகளாக வேரூன்றியிருந்த சாதிய ஆதிக்கத்தையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து, சுயமரியாதை- பகுத்தறிவு- சமத்துவம்- சமூகநீதி எனும் நான்கு தூண்களின் மீது புதிய எழுச்சிமிகு சமூகத்தைக் கட்டமைக்கப் போராடியவர் தந்தைப் பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
அவரது போராட்டம் ஒரு தனிமனிதருக்கு எதிரானதல்ல; ஆதிக்கத்திற்கு எதிரானது. அவரது குரல் ஒரு காலத்திற்கானதல்ல; சமத்துவம் நிலைநாட்டப்படும் வரை தொடர வேண்டிய குரல். “பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை; மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும்” என்ற சமூகநீதிப் பாதையைத் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமாகப் பதித்த பெரியாரின் வழியில் என்றும் நடந்திட உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
