Environment
வானிலை மாற்றத்தை அறிய டாப்லர் ரேடார் கருவிகள்: திருச்சி, நீலகிரியில் நிறுவ திட்டம்
சென்னை: தமிழகத்தில் மழை மேகங்களின் நகர்வை துல்லியமாக அறிய, கன்னியாகுமரி, திருச்சி, நீலகிரி மாவட்டங்களில், மத்திய அரசின் வானிலை துறை வாயிலாக, 'டாப்லர் ரேடார்' கருவிகள் நிறுவப்பட உள்ளன.
தமிழகத்தில் வானிலை மாற்றங்கள், மழை மேகங்களின் நகர்வு குறித்து அறிய, டாப்லர் ரேடார் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. உயரமான கட்டடங்களில் மட்டுமே, இந்த கருவிகளை நிறுவ முடியும்.
கடலியல் ஆய்வு அந்த வகையில், தற்போது சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை தேசிய கடலியல் ஆய்வு நிறுவனம், காரைக்கால் ஆகிய இடங்களில் மட்டுமே டாப்லர் ரேடார் வசதி உள்ளது.
மழை மேகங்கள் உருவாகும் போது, அதன் தன்மை எப்போது, எந்த அளவுக்கு மழை பொழிவு இருக்கும் என்பதை, இதன் வாயிலாக அறியலாம்.
இந்த வசதியை பயன்படுத்தியே, சென்னை வானிலை ஆய்வு மையம், 'நவ்காஸ்ட்' என்ற முறையில், குறுகிய கால மழை எச்சரிக்கை விபரங்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், வானிலை துறையுடன் இணைந்து, இரண்டு இடங்களில் டாப்லர் ரேடார் கருவிகள் நிறுவப்படும் என, தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கான பணிகள் இன்னும் நிலுவையிலேயே உள்ளன.
இது குறித்து, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை, காரைக்காலுக்கு அடுத்தபடியாக, கன்னியாகுமரி, திருச்சி, நீலகிரி மாவட்டங்களில் டாப்லர் ரேடார் கருவிகள் நிறுவ, இந்திய வானிலை துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
துல்லியம் இதை தொடர்ந்து, ராமநாதபுரம், சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய இடங்களில் டாப்லர் ரேடார் நிறுவ, 56 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
இந்த ஐந்து ரேடார்களும் செயல்பாட்டுக்கு வரும் போது, தமிழகம் முழுதும் ரேடார் கண்காணிப்பில் வந்து விடும். எந்த பகுதியில் எப்போது, என்ன அளவுக்கு மழை பொழிவு இருக்கும் என்பதை துல்லியமாக முன்கூட்டியே தெரிவிக்கும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.