Crime, law and justice
உடலுறுப்பு பாதுகாப்பு மையம் துவக்க நடவடிக்கை என்ன உயர்நீதிமன்றம் கேள்வி
மதுரை: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில்உடலுறுப்புகளை பாதுகாக்கும் மையம் துவக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: தோல், எலும்பு, குருத்தெலும்பு, இதய வால்வுகள் உள்ளிட்ட பல்வேறு உயிரியல் திசுக்கள் மற்றும் உயிரியல் பொருட்களை பாதுகாக்கும் (பயோ மெட்டீரியல்) மையத்தை மதுரை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் அமைக்க வேண்டும். தோல் வங்கி, பயோமெட்டீரியல் மையத்தின் முக்கியத்துவம், பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகுமணி: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 2024--25ல் அதிக உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அங்கு அவற்றை பாதுகாக்கும் மையம் இல்லாததால்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி பாதுகாக்கும் சூழல் நிலவுகிறது என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உடலுறுப்புகளை பாதுகாக்கும் மையம் துவக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மருத்துவக் கல்வி இயக்குனரிடம் விபரம் பெற்று, அரசு வழக்கறிஞர் இன்று (செப்.,17) தெரிவிக்க வேண்டும் என்றனர்.