Politics
ஆந்திராவைப் போல தமிழகத்திலும் விநாயகர் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் - நயினார் நாகேந்திரன்
சென்னை,ஆந்திராவைப் போலத் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்

ஆந்திராவைப் போலத் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா!" என்று விநாயகப் பெருமானிடம் சங்கத் தமிழையே வரமாகக் கேட்டார் ஔவையார். அப்படித் தமிழ் மொழியோடு பின்னிப் பிணைந்த முழுமுதற் கடவுள்தான் நம் விநாயகப் பெருமான். அந்த வேழமுகத்தோனின் திருவிழாவை உலக மக்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் கொண்டாட தயாராகி வரும் வேளையில், அத்திருவிழாவை மறைமுகமாக முடக்கும் வேலையில் முதல்-அமைச்சரின் அரசு ஈடுபடுகிறதோ என்கிற வலுவான ஐயம் எழுகிறது.
பொதுமக்கள் தங்களின் பக்தி உணர்வோடு அமைக்கும் வழிபாட்டுப் பந்தல்களுக்கு, தற்காலிக மின் இணைப்பு மீட்டருக்கு ரூ.3,800, 'டெபாசிட்' தொகையாக ரூ.4,000 செலுத்த வேண்டியுள்ளது. அதோடு வயரிங் செலவு உள்ளிட்ட பணிகளுக்கென ஒரு விநாயகர் சிலை மின் இணைப்புக்கு மட்டுமே சுமார் ரூ.15,000 வரை செலவாவதோடு, 'கமர்சியல்' கட்டணம் என்ற பெயரில் கூடுதல் சுமை சுமத்தப்படுவதாக விழா அமைப்பாளர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு எவ்விதத் தடையுமின்றி அரசே முன்வந்து இலவச மின்சாரம் வழங்கிப் பக்தர்களை உற்சாகப்படுத்தும் வேளையில், தமிழகத்தில் மட்டும் இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை நசுக்கும் வகையில் தவெக அரசு செயல்படுவதாக மக்கள் நினைக்கின்றனர். எனவே, முதல்-அமைச்சர் விஜயின் அரசு வணிகக் கட்டண முறையை ரத்து செய்வதோடு, விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவச மின்சாரம் வழங்கிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.