Politics
“த.வெ.க. நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும்” - நயினார் நாகேந்திரன்!

இறை உருவங்களைத் தங்களின் சுய விளம்பரங்களுக்குப் பயன்படுத்திய த.வெ.க. நிர்வாகிகள் மீது உரியச் சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “விநாயகர் சிலையை அவமதித்த த.வெ.க.வினரைக் கைது செய்க!” எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முதல்வர் விஜய்யின் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தை, தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது மக்களின் ஆன்மிக உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயலாகும். புனிதமான விழாவை அரசியல் சுயலாப மேடையாக்கி, இறை வழிபாட்டைத் தேர்தல் பிரச்சாரமாகத் தரம் தாழ்த்தும் த.வெ.க.வினரை முதல்வர் ஜோசப் விஜய் ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் மௌனம் காத்ததே இத்தகைய எல்லை மீறிய செயல்கள் தொடர்வதற்குக் காரணமாகும்.
எனவே, மக்களின் மத உணர்வுகளையும் வழிபாட்டு மரபுகளையும் சீர்குலைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இத்தகைய சிலைகளை த.வெ.க. அரசு உடனடியாக அகற்ற வேண்டும். இறை உருவங்களைத் தங்களின் சுய விளம்பரங்களுக்குப் பயன்படுத்திய த.வெ.க. நிர்வாகிகள் மீது உரியச் சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)