Politics
டெல்லி புயலால் லக்னோவில் அனல்..! - `இட ஒதுக்கீடு எதிர்ப்பு’ போராட்டத்தால் உ.பி-யை இழக்குமா பா.ஜ.க?

முன்னேறிய வகுப்பினரில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மாற்றி வாக்களித்தாலோ, வாக்களிக்காமல் புறக்கணித்தாலோ நிச்சயம் அது பா.ஜ.க-வின் வெற்றியை பாதிக்கும்.
டெல்லி ஜந்தர் மந்தரில் வீசிய இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டப் புயல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க-வின் கோட்டையை அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. உ.பி சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இட ஒதுக்கீடு எதிர்ப்பு முழக்கமும், பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) புதிய வழிகாட்டுதல்கள் தொடர்பான சர்ச்சையும் ஆளுங்கட்சியின் நிம்மதியைக் குலைத்திருக்கின்றன.
‘ரிசர்வேஷன் ஹட்டாவோ அந்தோலன்’ (Reservation Hatao Andolan) என்ற அமைப்பின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களும், முன்னேறிய வகுப்பினரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகப் போராடினர்.
கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாட்டைத் தடுப்பதற்காக யு.ஜி.சி., ‘சமத்துவ வழிகாட்டுதல்கள்’ நெறிமுறைகளைக் கொண்டுவர முயன்றது. ஆனால், இவை எஸ்.சி/எஸ்.டி/ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பையும், புகாரளிக்கும் அதிகாரத்தையும் கொடுப்பதாகச் சொல்லி பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் போர்க்கொடி தூக்கினர்.
போராட்டக்களத்தில் குதித்த முன்னேறிய வகுப்பினர், ``சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் அல்லாமல், குடும்ப வருமானம், பொருளாதார நிலை அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். தற்போதைய இட ஒதுக்கீட்டு முறை குறித்து அரசு ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட வேண்டும்’’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்தப் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை நேரில் அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். யு.ஜி.சி-யும் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை நிறுத்திவைத்திருக்கிறது. `நிறுத்திவைத்திருந்தாலும், முழுமையாக ரத்துசெய்யப்படவில்லையே’ என்ற அதிருப்தியில் இருக்கிறார்கள் போராடியவர்கள்.
இந்த இட ஒதுக்கீடு விவகாரம் வெறும் மாணவர் போராட்டத்தோடு மட்டும் நிற்கவில்லை. இது பா.ஜ.க-வின் பாரம்பர்ய வாக்குவங்கியான பிராமணர்கள், தாக்கூர்கள் அடங்கிய முன்னேறிய சாதியினரிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. `எதிர்வரும் உ.பி சட்டமன்றத் தேர்தலில் இது பா.ஜ.க-வுக்குப் பின்னடைவை உண்டாக்கலாம்’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
உ.பி-யின் மொத்த வாக்காளர்களில் சுமார் 25% பேர் பிராமணர்கள், தாக்கூர்கள் உள்ளிட்ட முன்னேறிய வகுப்பினர். 2022 சட்டமன்றத் தேர்தலில், பிராமண சமூகத்தின் வாக்குகளில் சுமார் 90% பா.ஜ.க-வுக்கே கிடைத்திருந்தன. இந்த முறை அந்த வாக்குகள் எதிர்க்கட்சிகள் வசம் சென்றால், பா.ஜ.க ஆட்சியை இழக்க நேரிடும்.
இது குறித்துப் பேசும் உ.பி அரசியலை உற்று நோக்கும் சிலர், ``முன்னேறிய வகுப்பினரில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மாற்றி வாக்களித்தாலோ, வாக்களிக்காமல் புறக்கணித்தாலோ நிச்சயம் அது பா.ஜ.க-வின் வெற்றியை பாதிக்கும். பீகாரில், தனது கோட்டையான பங்கிப்பூர் தொகுதியில் பா.ஜ.க தோல்வியடைந்ததற்கு யு.ஜி.சி-யின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளும் காரணமாக இருந்தன. எனவே, உ.பி-யிலும் பா.ஜ.க-வின் பாரம்பர்ய வாக்காளர்கள் மாற்றி வாக்களிக்க வாய்ப்புகள் அதிகம்.
ஆளுங்கட்சியின் இந்தத் தர்மசங்கட நிலையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கிறது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி. ஏற்கெனவே, ஓ.பி.சி., தலித், சிறுபான்மையினர்களைக் குறிவைத்துப் பிரசாரம் செய்யும் அகிலேஷ், பா.ஜ.க-வால் புறக்கணிக்கப்படுவதாகக் கருதும் முன்னேறிய சாதியினரையும் குறிவைக்கத் தொடங்கியிருக்கிறார்.
2024 மக்களவைத் தேர்தலில் அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெற வைத்ததுபோல, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் யாதவ் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், தலித் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் வியூகத்தில் இறங்கியிருக்கிறார் அகிலேஷ். சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்திருக்கும் `சாதிவாரி கணக்கெடுப்பு’ முழக்கத்தால், ஓ.பி.சி வாக்காளர்களையும் தன் பக்கம் திருப்பிக்கொண்டிருக்கிறது `இந்தியா’ கூட்டணி’’ என்கின்றனர்.
சமீபத்தில் வெளியான `இந்தியா டுடே’ கருத்துக்கணிப்பில், ``தற்போது மக்களவைத் தேர்தல் நடந்தால், உ.பி-யின் 80 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி 41 இடங்களையும், பா.ஜ.க தலைமையிலான `என்.டி.ஏ’ கூட்டணி 38 இடங்களையும் கைப்பற்றும்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2026 ஜனவரியில் எடுக்கப்பட்ட கணிப்பில் என்.டி.ஏ 48 இடங்களையும், `இந்தியா’ கூட்டணி 31 இடங்களையும் பெறும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், வெறும் ஆறு மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.
`2027 உ.பி சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தால், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் அது எதிரொலிக்கும்’ என நம்புகின்றன எதிர்க்கட்சிகள். `உ.பி-யிலும் மத்தியிலும் ஆட்சி மாற்றம் நிகழும்’ என்ற எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை பலிக்குமா... அல்லது வீண் போகுமா... பொறுத்திருந்து பார்ப்போம்!
