Politics
தமிழகத்தைத் தாண்டும் பா.ம.க...

ஆந்திராவில் அன்புமணியின் திட்டம் என்ன?
2031-ல் தமிழ்நாட்டில் பா.ம.க-வின் ஆட்சிதான் என அடித்துச் சொல்லும் அன்புமணி ராமதாஸ், ஆந்திராவிலும் கட்சியைத் தொடங்க ஆயத்தமாகியிருக்கிறார். தமிழக - ஆந்திர எல்லை மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான வன்னியர் சமூக மக்களைக் கணக்கில்கொண்டு களமிறங்கியிருப்பதாகச் சொல்கிறது மாம்பழ வட்டாரம். ஆந்திராவில் கால் பதிக்கும் பா.ம.க-வுக்கு அரசியல் களம் எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் மாறியிருக்கும் அரசியல் சூழல்களால் ஆளுங்கட்சியாகும் கனவுகளோடு காய்களை நகர்த்திவருகிறது பா.ம.க. இது ஒருபுறமிருக்க, நம் பக்கத்து மாநிலமான ஆந்திராவில் கட்சியைக் கட்டமைக்க முன்னாள் எம்.பி டாக்டர் ஆர்.செந்தில், செஞ்சி எம்.எல்.ஏ அ.கணேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை மாநில ஒருங்கிணைப்பாளர்களாக அறிவித்திருக்கிறார் அன்புமணி. மேலும், சித்தூர், திருப்பதி, விசாகப்பட்டினம் காக்கிநாடா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம் எனப் பல்வேறு பகுதிகளுக்கு, 44 பொறுப்பாளர்களையும் நியமனம் செய்திருக்கிறார்.
`ஆந்திராவில் பா.ம.க-வுக்கான திட்டம் எப்படித் தொடங்கியது?’ விவரமறிந்த வட்டாரத்தில் பேசினோம். “ஆந்திராவில் சித்தூர், திருப்பதி, நெல்லூர், காக்கிநாடா, கிழக்கு கோதாவரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வன்னியர் மக்கள் லட்சக்கணக்கில் வாழ்கின்றனர். வன்னிய குல சத்திரியர், அக்னி குல சத்திரியர் உள்ளிட்ட இரு பெயர்களில் 15 துணைப் பிரிவுகளில் அழைக்கப்படுகின்றனர். ஆந்திர மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் இருந்தாலும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். அதற்கு, அரசியல்ரீதியான அங்கீகாரம் போதிய அளவு கிடைக்காமல் இருப்பது முக்கியக் காரணமாக இருக்கிறது. ஒரு சில சட்டமன்றத் தொகுதிகளில் தனித்து நின்றால்கூட வெற்றிபெறும் அளவுக்கு வன்னியர் மக்கள் வசிக்கிறார்கள்.
ஆனால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. அதனால், அங்கு பா.ம.க-வைத் தொடங்க வேண்டும் என அங்கிருக்கும் சமூக மக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கைவைத்தனர். கடந்த மாதத்தில் கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டமும் சென்னையில் நடைபெற்றது. அதனடிப்படையில்தான் தற்போது நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். ‘நீங்கள் கட்சியை மட்டும் தொடங்கிவிடுங்கள். மற்ற விஷயங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று அங்கிருப்பவர்கள் சொல்ல, எங்கள் தலைவரும் தயாராகிவிட்டார்” என்கிறார்கள்.
`தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவில் கட்சி தொடங்குவது எந்த அளவுக்குக் கைகொடுக்கும்?’ மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். “இது நிச்சயமாக வரவேற்கவேண்டிய விஷயம். கேரளாவில் புலையர்களை மையப்படுத்தி திருமாவளவன் வேலை செய்துவருகிறார். தற்போது திருவனந்தபுரத்தில் நடந்த விருது விழாவில்கூட கேரள முதல்வர் சதீசன் கலந்துகொண்டார். புலையர்கள் மத்தியில் திருமாவளவனுக்கு இருக்கும் நற்பெயர், தனக்கு உதவும் என்பதால்தான் முதல்வரே கலந்து கொள்கிறார்.
அதேபோல, ஆந்திராவில் பா.ம.க தொடங்கப்பட்டால், அக்னி குல சத்திரியர்கள் மத்தியில் அன்புமணிக்கு ஒரு நன்மதிப்பு, ஆதரவு வட்டம் உருவாகும். அதை மதித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நாளை இவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு வரலாம்், தேர்தலில் கணிசமான சீட்டு கொடுக்கலாம். அது அங்கு வாழும் மக்களுக்குப் பயன்படும். அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் ராமதாஸ் வன்னியர் சங்கத்தைத் தொடங்கிய பிறகுதான், இங்கிருக்கும் கட்சிகளில் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. அதேபோல, அக்னி குல சத்திரியர்கள் அன்புமணி பக்கம் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக அங்கிருக்கும் கட்சிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்” என்றார்.
“தமிழ்நாட்டுக் கட்சிகள் இதுவரை தங்கள் எல்லையைத் தாண்டி மற்ற மாநிலங்களில் கட்சி தொடங்காமல் இருந்ததுதான் தவறான விஷயம். வி.சி.க-வைப்போல, பா.ம.க-வும் தற்போது களமிறங்கியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். காரணம், ஆந்திராவின் பல மாவட்டங்களில் தமிழர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் கன்னடர்கள், தெலுங்கர்களுக்கு அரசியல்ரீதியாக நாம் பிரதிநிதித்துவம் கொடுக்கிறோம். ஆனால், மற்ற மாநிலங்களில் நமக்கு எதுவும் கொடுப்பதில்லை. அதனால், அன்புமணியின் இந்த மூவ் மிகவும் சரியானது” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருக்கும் சாதியரீதியான அடையாளத்தைக் கடந்து தற்போது அனைவராலும் பா.ம.க கவனிக்கப்படும் சூழலில், ‘மீண்டும் சமூகரீதியாக மக்களை அணிதிரட்டுவது சரிதானா?’ என்ற கேள்வியை, ஆந்திர மாநில பா.ம.க ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் எம்.பி டாக்டர் ஆர்.செந்திலிடம்் முன்வைத்தோம். “ஆந்திராவில் இரண்டு பிரதான கட்சிகளுமே வணிக சமூகங்களின், வணிகர்களின் கட்சியாக இருக்கின்றன. அதனால், மற்ற உழைக்கும் சமூக மக்களின் குரல் அங்கே நசுக்கப்படுகிறது. அந்த மக்களுக்கு உரிய அரசியல் அங்கீகாரம் இல்லை. அதனால், உழைக்கும் பாட்டாளி மக்களுக்கான உரிமைக்குரலாக இருக்கவேண்டிய தேவை இருக்கிறது. குறிப்பிட்ட சமூகம் என்றில்லை, அங்கிருக்கும் பல்வேறு உழைக்கும் சமூக மக்கள் அன்புமணியைத் தங்களின் நம்பிக்கைக்குரிய தலைவராகப் பார்க்கிறார்கள். சௌமியாவின் குரலையும் தற்போது இந்தியாவே கேட்கிறது. நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், இன்று தமிழ்நாட்டின் முக்கியக் குரலாக இருக்கிறோம். அதேபோல, ஆந்திராவிலும் இருப்போம். எதிர்காலத்தில் கர்நாடகாவிலும் இருப்போம்” என்றார் நம்பிக்கையாக.
ஆந்திரத்திலாவது மாம்பழம் பழுக்குமா?
