Politics
டிசம்பருக்குள் தமிழகத்தில் மாற்றம் வரும்: மணிமாறன் எம்.எல்.ஏ., கணிப்பு
திருமங்கலம்: தமிழகத்தில் வரும் டிசம்பருக்குள் பெரிய மாற்றம் வரும்'' என, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் எம்.எல்.ஏ., பேசினார்.
மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்தது. தலைமைக் கழக பிரதிநிதிகள் செல்வராஜ், ரவீந்திரன், ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி, சண்முகம், மதன், நகரச் செயலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டனர்.
மணிமாறன் பேசியதாவது : உலகத்திலேயே தி.மு.க., போன்ற கட்டமைப்புள்ள இயக்கம் வேறில்லை. மக்கள் ஒரு மாயையை நம்பி ஓட்டளித்து விட்டனர். அதன் விளைவை ஒரு சட்டசபை கூட்டத் தொடரிலேயே மக்கள் உணர்ந்து விட்டனர். ஒரு முதலமைச்சராக இருப்பவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சட்டசபையில் பதிவு செய்கிறார்.
நான் மூன்று ஆதாரங்களை வைத்துள்ளேன். அதை திறந்து பார்த்தால் தாங்க மாட்டீர்கள் எனக்கூறிய முதல்வர், சின்னப் பிள்ளைகள் படிக்கும் புத்தகத்தை எடுத்து வந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை ஆதாரம் என்கிறார். வழக்குக்கே வராத சர்க்காரியா கமிஷனை ஆதாரம் என்று வாய் கிழிய பேசுகிறார். மாயையை நம்பி தவறாக வாக்களித்த மக்கள், விரைவில் முதல்வர் விஜய்க்கு தண்டனை கொடுப்பர். வரும் டிசம்பருக்குள் தமிழ்நாடு மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும், என்றார்.