மனைவியின் ‘எக்ஸ்’ காதலனைத் தீர்த்துக்கட்ட கணவனின் ‘எக்ஸ்’ காதலி ஸ்கெட்ச்- இன்ஸ்டாவில் வலை விரித்து அரங்கேறிய கொ@லை

மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில், தனியார் கல்லூரி அருகே இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த உடலை மீட்டுப் பெருங்குடி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த தேவேந்திரன் என்பது தெரியவந்தது.
இந்த வழக்கின் பின்னணியை ஆராய்ந்த போலீசாருக்கு, திரைப்படத் திரைக்கதையையே மிஞ்சும் வகையிலான ஒரு முறையற்ற தொடர்பும் மற்றும் பழிவாங்கும் கொடூரக் கொலைச் சதியும் அம்பலமாகியது. கொலை செய்யப்பட்ட தேவேந்திரனும், மதுரையைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தப் பெண்ணைப் புளியங்குளத்தைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆனால், திருமணத்திற்குப் பிறகும் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் பெண் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கினார். தனது மனைவி இன்னும் அவளது முன்னாள் காதலனான தேவேந்திரனுடன் பேசிப் பழகி வருவதாகக் கணவர் ராஜபாண்டிக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜபாண்டி, தேவேந்திரனைத் தீர்த்துக்கட்ட ஒரு விபரீதமான திட்டத்தைத் தீட்டினார்.
தனது விபரீதத் திட்டத்தை அரங்கேற்ற, ராஜபாண்டி தனது முன்னாள் காதலியான திருமங்கலத்தைச் சேர்ந்த முத்துமாரி என்பவரைத் தொடர்பு கொண்டார். ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த முத்துமாரியிடம், "என் மனைவியின் முன்னாள் காதலனை நாம் பழிவாங்க வேண்டும், உன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் அவனிடம் பேசிப் பழகி, அவனை எப்படியாவது கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு வரவழைத்துக் கொடு" என்று ராஜபாண்டி கேட்டுள்ளார். இதன் ஆபத்து புரியாத முத்துமாரியும் இன்ஸ்டாகிராமில் தேவேந்திரனுக்கு நட்பு அழைப்பு விடுத்து, அவருடன் பேசி வலை வீசியுள்ளார்.
முத்துமாரியின் இன்ஸ்டா மெசேஜ்களால் கிறங்கிப் போன தேவேந்திரன், தன்னைச் சந்திக்க முத்துமாரி குறித்த தேதியைத் தனது இறுதி நாள் என்று அறியாமல் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார். முத்துமாரியைச் சந்திப்பதற்காகத் தனது நண்பருடன் கொடைக்கானலில் இருந்து மதுரை பெரியார் நகர் பகுதிக்குத் தேவேந்திரன் வந்துள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே அரிவாளுடன் பதுங்கியிருந்த ராஜபாண்டி மற்றும் அவரது நண்பரான கப்பலூரைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து தேவேந்திரனைத் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலின் போது, ராஜபாண்டியின் நண்பன் ராஜேஷின் கண்ணில் எதிர்பாராதவிதமாகக் காயம் ஏற்பட்டது. அவரைச் சிகிச்சைக்காக வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ராஜபாண்டி அழைத்துச் சென்றபோது, கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், கொலைக்குச் சதித்திட்டம் தீட்டி, மூளையாகச் செயல்பட்ட ராஜபாண்டி மற்றும் அவரின் முன்னாள் காதலி முத்துமாரி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)