ரூ.1.40 கோடி தங்க நகை பறக்கும் படையினர் பறிமுதல்
தாராபுரம்: தாராபுரம் அருகே, உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட, 1.40 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, மூலனுார் வஞ்சியம்மன் கோவில் பகுதியில், தேர்தல் பறக்கும் படை உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி ஆய்வு செய்தபோது, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட, 1.15 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவற்றின் மதிப்பு, 1.40 கோடி ரூபாய்.
கோவை, இடையர்வீதியை சேர்ந்த திரிலோக், 45, நகைப்பட்டறை நடத்தி வருகிறார்.
கோவையில் இருந்து மூலனுாரில் உள்ள ஒரு தனியார் நகைக்கடைக்கு விற்பனை செய்வதற்காக நகைகளை காரில் கொண்டு சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.