Politics
அமெரிக்காவின் நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றிய ஈரான்.. ஹோர்முஸ் நீரிணையில் பரபரப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் அதிநவீன நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றியதாக ஈரான் அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி தொடங்கி ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க அமெரிக்காவும், அதற்கு மறுப்பு தெரிவித்து ஈரானும் முரண்டு பிடித்து வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு என்பது தொடர்ந்து நிலவி வருகிறது.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் அதிநவீன நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றியதாக ஈரான் புரட்சிகர படை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தயாரிக்கப்பட்ட 19 அடி நீள நீர்மூழ்கி கப்பல் போன்ற ட்ரோன், கண்ணிவெடி எதிர்ப்பு நடவடிக்கை, கடற்பரப்பு கண்காணிப்பு, உளவுத் தகவல் சேகரிப்பு, நீருக்கு அடியில் எதிரி நாட்டின் உள்கட்டமைப்புகள், கேபிள் மற்றும் குழாய்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடக் கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dive-LD என்றழைக்கப்படும் இந்த வகை வாகனம் தொடர்ந்து 10 நாட்கள் கடலுக்கு அடியில் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் செயல்படக் கூடியது எனக் கூறப்படுகிறது. அதேநேரம், தங்களது ஆழ்கடல் ட்ரோன் ஒன்று செயலிழந்ததாக அமெரிக்க ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும், ஈரான் கைப்பற்றியது தங்களுடைய ட்ரோன் என அமெரிக்கா குறிப்பிடவில்லை.
