Politics
ஈரானின் வரைபடத்தில் ட்ரம்ப்பின் முகம்; உலக அரசியலில் மீண்டும் பதற்றம்?

கடந்த பிப்ரவரி முதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதில், இரு தரப்பிற்கும் இடையே வான் வழி தாக்குதல் என்பது மிக முக்கிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இருதரப்பிற்கும் இடையிலான இந்த போரால், உலக நாடுகளிடையே எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு, கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுவருகிறது.
இதனிடையே, இந்த போரை நீட்டிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்குப் போர் குறித்தான எச்சரிக்கை கொடுத்து வருகிறார். மறுபுறம் ஈரானும் போருக்குத் தயாராக இருப்பதாகப் பதிலடி கொடுத்து வருகிறது. எனவே, இருதரப்பிற்கும் இடையே மீண்டும் போர் உச்ச நிலையை எட்டினால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மீண்டும் உலக அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த புதிய புகைப்படங்களை, அவர் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டார். அதில் ஒரு புகைப்படத்தில், ஈரான் வரைபடத்தில் அதிபர் ட்ரம்பின் முகம் பதிவிடப்பட்டு உள்ளது.
மற்றொரு படத்தில் அமெரிக்க போர் விமானம், ஈரானின் கார்க் தீவு மீது குண்டுகளை வீசி தகர்க்கும் காட்சி இடம்பெற்று உள்ளது. அதோடு அவர் வெளியிட்ட பதிவில், ‘பை, பைகார்க்’ என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், ’ஈரான் வீழ்கிறது’ என்று பதிவிட்டுள்ள அவர், ’ஹார்மோஸ்’ நீரிணையானது அமெரிக்காவின் ஒரு பகுதி என்றும் குறிப்பிட்டுள்ளார். இது உலக நாடுகளிடையே மீண்டும் போர் குறித்தான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளப் பதிவில், “பெர்சிய வளைகுடா பகுதியில் அமெரிக்க ராணுவத்தோடு தென்கொரியவும் இணையுமானால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)