Arts, culture, entertainment and media
ஒரு ஏக்கர்... பாரம்பர்ய நெல் ரகங்கள்... 60 ஆயிரம் ரூபாய் லாபம்!
சன்ன ரகங்களில் கதிர் விடும்போது, குருத்துப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமா இருக்கும். அதுக்கு பூச்சி விரட்டியெல்லாம் தெளிக்கிறதில்ல.

நேரடி விற்பனை... நிறைவான வருமானம்!
இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் பலரும் வீரிய ரகங்களைத் தவிர்த்து... பாரம்பர்ய ரகங்களைத் தேடிப்பிடித்துச் சாகுபடி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படி பாரம்பர்ய ரகங்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளை அவ்வப்போது அடையாளம் காட்டி வருகிறது, `பசுமை விகடன்'. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இளையராஜாவின் பாரம்பர்ய நெல் சாகுபடி குறித்து இந்த இதழில் பார்ப்போம். இவர் தனது வயலில் பலவிதமான பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து விதை நெல்லாகவும், அரிசியாக மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விளாகம் கிராமத்தில் இருக்கிற இளைய ராஜாவின் வயலில் அவரை சந்தித்துப் பேசினோம். ``நான் வேதியியலில் முதுகலை முடிச்சுட்டு ஒரு சோலார் பேனல் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநரா வேலை பார்க்கிறேன். அப்பாதான் பல வருஷங்களா விவசாயம் பார்த்துட்டிருந்தார். அவர் இறந்த பிறகு, அம்மாவும் அண்ணன் களும் விவசாயத்தை பார்த்துக்கிட்டாங்க. நானும் நேரம்கிடைக்கும்போதெல்லாம் வயலில் வேலை செய்ய ஆரம்பிச்சுடுவேன்.
சூழல் கெடாமல் ஆரோக்கிய உணவு!
நான் வேதியியல் படிச்சதால, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளால் மண்ணிலும் விளைபொருள்களிலும் ஏற்படுகிற விளைவுகள் பத்தி தெரிஞ்சிருந்தது. அதனால்தான் நிலம், நீர், காற்று மூணும் கெட்டுப்போகாமல் விவசாயம் செஞ்சு ஆரோக்கியமான உணவைச் சாப்பிடணும்னு முடிவு செஞ்சு, இப்போ ஏழு வருஷங்களா முழு இயற்கை விவசாயம்தான் செய்றேன்.
எங்கக் குடும்பத்துக்குச் சொந்தமா ஒரு ஏக்கர் நிலம் இருக்கு. அதில், 10 விதமான பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்றேன். தங்கச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, மணிச் சம்பா, மிளகுச் சம்பா, காலாபட்டி, ரத்தசாலி, சீரகச் சம்பா, கருப்புக் கவுனி, வெள்ளைக் கவுனி, ராதா திலக், ராஜமன்னார், கல்லுண்டை சம்பா, காட்டுயாணம், பூங்கார்னு...இதுவரை கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிர் செஞ்சு நல்ல விளைச்சல் எடுத்துருக்கேன்’’ என்று முன்னுரை கொடுத்த இளையராஜா, தனது சாகுபடி அனுபவங்கள் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
ஓர் ஆண்டில் 10 ரகங்கள்!
``ஒவ்வொரு வருஷமும் ஏதாவது 10 நெல் ரகங்களை மட்டும் பயிர் செய்றது வழக்கம். ஒரு ரகத்துக்கு ஒரு சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைப்பேன். கலப்பில்லாமல் நெல் விளைவிக்கணும்ங்கிறதுக்காக ஒவ்வொரு ரகத்துக்கும் இடையில் 5-6 அடி இடைவெளி விடுவேன். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 20 கிலோ எரு, 10 கிலோ இலைத்தழைகள் போட்டு சேத்துழவு செஞ்சு ஒரு வாரம் புளிக்க விடுவேன். அதுக்குப் பிறகு மண்ணை சமப்படுத்தி, கால் கிலோ முதல் அரை கிலோ வரை விதை நெல்லைத் தூவி விதைப்பேன். ஒற்றை நாற்று நடவு முறைங்கிற தால குறைவான அளவுதான் விதை நெல் தேவைப்படும்.
பயிரைச் செழிப்பாக்கும் சர்க்கரை சாணக் கரைசல்!
ஒரு டிரம்மில் 50 லிட்டர் தண்ணீர் விட்டு 5 கிலோ ஈரச்சாணி, அரை கிலோ நாட்டுச் சர்க்கரை சேர்த்து கரைச்சு புளிக்க வைச்சிடுவேன். இந்தக் கரைசலில் 5 லிட்டர் எடுத்து ஒரு சென்ட் நாற்றங்காலில் விதை நெல் விதைத்த 6, 12, 18-ம் நாள்களில் தெளிச்சு விடுவேன். நாற்றுகள் நல்ல ஊக்கமாவும் வேகமாவும் வளருது. விதைச்ச 20-22 நாள்களில் நாற்றுகள் தயாராகிடும்.
ஒற்றை நாற்று நடவு!
நடவு வயலில் 2 சால் உழவு ஓட்டிட்டு அடியுரமா குப்பை எரு போட்டு ஓரு உழவு ஓட்டி வயலை சேறாக்கி தயார் செஞ்சு... 40 சென்டிமீட்டர் இடைவெளியில் குத்துக்கு ஒரு நாத்து வீதம் நடவு செய்வேன். நாற்றங் காலிலிருந்து நாற்றைப் பறிச்ச அன்னிக்கே நடவு செஞ்சுட்டா 7 நாளிலேயே தூர் கட்ட ஆரம்பிச்சுடும். தாமதப்படுத்தினால், தூர் கட்டறதுக்கும் தாமதமாகும். அதிக இடைவெளி விட்டு நடவு செய்யுறதால... சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் நல்லா கிடைக்கும்; பூச்சி, நோய்த்தாக்குதல்கள் குறையும்; தூர்களும் அதிக எண்ணிக்கையில் வெடிக்கும்; களை எடுக்கிறதும் சுலபமா இருக்கும்.
நாற்றுகள் நடவு செஞ்ச 20 நாளுக்கு ஒரு முறை பாசனநீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்து கொடுப்பேன். நடவு செஞ்ச 15 நாளுக்கு ஒரு முறை, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி மீன் அமினோ அமிலம்னு கலந்து தெளிப்பேன். பூ பூக்கிற சமயத்திலும் பூத்த 7 நாள்களுக்குப் பிறகும், 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர்க் கரைசல்னு கலந்து தெளிப்பேன். இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கறதோடு, பூக்கள் உதிராமல் நெல்மணிகளின் திரட்சியா வரும்.
பூச்சி, அணில்களை விரட்டுவதில்லை!
சன்ன ரகங்களில் கதிர் விடும்போது, குருத்துப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமா இருக்கும். அதுக்கு பூச்சி விரட்டியெல்லாம் தெளிக்கிறதில்ல. அடுத்த சில நாள்களில் பூச்சிகள் தானாகவே குறைஞ்சிடுது. காட்டுயானம், கருப்புக்கவுனி, மாப்பிள்ளைச் சம்பா மாதிரியான ரகங்களில் நெல்மணிகள் முதிர்ச்சி அடையும் சமயத்தில் அணில்கள் வந்து நெல் மணிகளை சாப்பிடுது. அதை நான் கண்டுக்கிறதில்லை’’ என்ற இளையராஜா, மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு ஏக்கரில் 20 மூட்டை மகசூல்!
``ஒரு ஏக்கர் வயலில் சராசரியா 20 மூட்டை ( 60 கிலோ மூட்டை) நெல் மகசூல் கிடைக்குது. இதில் பாதியை விதை நெல்லாகத் தரம் உயர்த்தி விற்பனை செய்வேன். விதை நெல்லை கை அறுவடைதான் செய்யணும். அப்போதான், தரமா இருக்கும். அதனால், எங்க குடும்பத்தினரே சேர்ந்து கை அறுவடை செய்வோம்.
ஒரு ஏக்கர் வயலில் கிடைக்கும் 1,200 கிலோ நெல்லில் 600 கிலோவை எடுத்து 13 சத விகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் வரும் அளவுக்கு வெயிலில் காயவச்சி, 3 முறை தூற்றி சாக்கில் கட்டி சேமிச்சி வைப்போம். ஒவ்வொரு அமாவாசை அன்னிக்கும் 5 மணி நேரம் மிதமான வெயிலில் காயவெச்சு எடுத்து வெப்போம். இது மாதிரி 3 முறை காயவெச்சு விதைநெல்லா விற்பனை செய்வேன். சமூக வலைதளம் மூலமா எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு கிலோ விதைநெல் 100 ரூபாய்னு விற்குறேன். மொத்தம் 600 கிலோ விதைநெல் விற்பனை செய்றது மூலம் 60 ஆயிரம் ரூபாய் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
மீதி 600 கிலோ நெல்லை அரைச்சா, 400 கிலோ அரிசி கிடைக்கும். வீட்டுத் தேவைக்குப் போக ஒரு கிலோ 90 ரூபாய்னு நேரடியா விற்பனை செய்றேன். மொத்தம் 400 கிலோ அரிசியின் விலைமதிப்பு 36 ஆயிரம் ரூபாய். தவிடு மற்றும் வைக்கோலின் விலைமதிப்பு 4 ஆயிரம் ரூபாய். ஆக, ஒரு ஏக்கர் பாரம்பர்ய நெல் சாகுபடி மூலம் மொத்தம் ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவு போக 60 ஆயிரம் ரூபாய் லாபம்’’ என்று சொல்லி விடைகொடுத்தார், இளையராஜா.
மண்ணின் வளம் கூட்டும் துவரை, உளுந்து!
“இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்ச முதல் நான்கு வருஷங்கள் வரைக்கும்... வருஷத்துக்கு ஒரு முறை தக்கைப்பூண்டு, சணப்பு கலந்து விதைச்சு, பூ எடுக்கிற சமயத்தில் மடக்கி உழுது விட்டேன். அதுக்கடுத்த வருஷம், தை மாசத்தில உளுந்தையும் துவரையையும் கலந்து விதைச்சேன். விதைச்ச 90-ம் நாள் உளுந்து அறுவடைக்கு வந்துச்சு. அப்போ, துவரை 2 அடி உயரத்துக்கு வளர்ந்திருந்துச்சு. அடுத்த மூணு மாசத் தில் துவரை அறுவடைக்கு வந்துச்சு. அறுவடை முடிச்சிட்டு உளுந்து, துவரைச் செடிகளை வேரோடு பிடுங்கிப் போட்டு உழவு ஓட்டி விட்டேன். அதெல்லாம் மட்கி மண்வளமா மாறினதில் நெல் பயிர் நல்லா வளர்ந்துச்சு. வீட்டுக்குத் தேவையான உளுந்தும், துவரையும் கிடைச்சது. அதிலிருந்து ஒவ்வொரு வருஷமும் தை அல்லது மாசி மாசம் உளுந்து மற்றும் துவரை பயிர் செய்றதை வழக்கமா வச்சிருக்கேன்” என்கிறார், இளையராஜா.
