Politics
காலியாகும் அணைகள்... கருகும் தேயிலை...

தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள்! - தாகத்தில் தவிக்கும் நீலகிரி...
தென்னகத்தின் தண்ணீர்த் தொட்டியான நீலகிரி, இன்று தண்ணீருக்காகத் தவிக்கும் நிலமாக மாறிவிட்டது. பொய்த்துப்போன தென்மேற்குப் பருவமழை, வறண்டுகிடக்கும் அணைகள், குடிநீருக்காக அல்லாடும் மக்கள், தண்ணீரைத் தேடி அலையும் வனவிலங்குகள், கருகும் மலைக் காய்கறிகள், சருகாக உதிரும் காபிப் பூக்கள் என வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கிறது மலை மாவட்டம். அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியோடு, வானத்தைப் பார்த்தபடி காத்திருக்கிறார்கள் நீலகிரி மக்கள்.
குளிர் தேசத்தில் ஃபேன் போடும் நிலை!
வரலாறு காணாத இந்த வறட்சி குறித்து நம்மிடம் பேசிய தோடர் பழங்குடிப் பெண் வாசமல்லி, “ஊட்டி குளிருல இருந்து தப்பிக்கத்தான் எங்க தோடர் வீடுகளையே குளிரைத் தாங்குற மாதிரி கட்டி வாழுறோம். ஆனா, இன்னைக்குக் குளிருக்கு பதிலா வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள்ள ஃபேன் போடவேண்டிய நிலைமை வந்துருச்சு. வெயில் நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே போறதால, முதுமலைப் பக்கத்துல இருக்குற யானை, மான் மாதிரி வனவிலங்குகள்கூட தண்ணியைத் தேடி ஊட்டி மலைப் பக்கம் வர ஆரம்பிச்சுடுச்சுங்க.
எனக்கு நினைவு தெரிஞ்சு தென்மேற்குப் பருவமழை இந்த அளவுக்குப் பொய்ச்சது இப்பத்தான். முன்னாடி மூணு மாசம் விடாம மழை பெய்யும். இப்ப குடிக்கிற தண்ணிக்கே பஞ்சம். தண்ணியை சேமிச்சு வெக்கிற சதுப்பு நிலம், பூர்வீகப் புல்வெளியையெல்லாம் அழிச்சதோட விளைவைத்தான் இப்படி அனுபவிக்கிறோம்.
நீர்நிலைகளைச் சரி பண்ணுறது, தண்ணியை உறிஞ்சுற அந்நிய மரங்களை வெட்டி எறியறது மாதிரி எந்த வேலையையும் அரசு செய்யறதில்லை. ஊட்டியிலேயே தண்ணிக்குத் தட்டுப்பாடுன்னா மாயாறு, பவானி ஆறுகளோட நிலைமை இன்னும் மோசம். எல்-நினோ, சூப்பர் எல்-நினோன்னு அதிகாரிங்க ஏதேதோ காரணம் சொல்லி, காலத்தை ஓட்டுறாங்க. கடைசியில கஷ்டப்படுறது பாவப்பட்ட நாங்கதான்” என்றார் ஆதங்கத்துடன்.
தரை தட்டிய அணைகள்... லாரியில் குடிநீர்!
நீலகிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன், “மழை இல்லாம எமரால்டு, பார்சன்ஸ் வேலி, ரேலியா உள்ளிட்ட அணைகளெல்லாம் வற்றிப்போய்விட்டன. மழைக்காலத்திலேயே லாரியில் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் நிலைமை மக்களுக்கு வந்திருக்கிறது. நீலகிரியின் முக்கிய வாழ்வாதாரமான தேயிலை விவசாயம் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. போதிய மழையில்லாததால் துளிர்விடவேண்டிய இளம் தேயிலைக் கொழுந்துகள் கருகி வருகின்றன. பசுந்தேயிலை வரத்து குறைந்ததால், மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி 20% வரை சரிவடைந்துள்ளது. கேரட், முட்டைக்கோஸ், பூண்டு, உருளைக்கிழங்கு பயிர்களும் தண்ணீரின்றி காய்ந்துவருகின்றன.
2 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை தூரத்துக்கு ஏற்ப விலை கொடுத்து தண்ணீரை வண்டிகளில் வாங்கிப் பயன்படுத்தவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கிறோம். அதனால் விவசாயச் செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆகவே, நீலகிரிைய வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மானியம் கொடுப்பதுடன், விவசாயக் கடனை முழுவதுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். காடுகளிலும் தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, முதுமலை, மாயாறு பகுதிகளில் இருக்கின்ற பிணந்தின்னிக் கழுகுகளின் இனப்பெருக்கமும் ரொம்பவும் பாதிக்கப்படுகிறது” என்றார்.
அரசின் பதில் என்ன?
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லஷ்மி பவ்யா தன்னீரு, “நீலகிரி மாவட்டத்தில் தற்போதைய தண்ணீர் தேவை, இருப்பு, விநிேயாகம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அனைத்துப் பேரூராட்சிகள், ஊராட்சிகளிலுள்ள நீர்நிலைகள் தூர்வாருதல், குடிநீர் விநியோகம் செய்யும் குழாய்களில் நீர்க்கசிவு, சேதம் போன்றவற்றைச் சரிசெய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சில இடங்களில் போர்வெல் அமைத்துத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எடுத்தவுடன் போர்வெல் அமைக்க முடியாது. போர்வெல் தேவைப்படும் எனக் கூறப்படும் இடங்களில் நீர்வள வல்லுநர்கள் மூலம் ஆய்வு நடத்தி, அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றன. விவசாயத்தைப் பொறுத்தவரை சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்வது குறித்தும், எந்த மாதிரியான பயிர் விவசாயம் செய்ய வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் தோட்டக்கலைத்துறை மூலமாகவும், வேளாண் அறிவியல் நிலையம் மூலமாகவும் வழங்கப்பட்டுவருகின்றன. வறட்சி பாதிப்பு குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. மழையின்றி இதே வறட்சி நீடித்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
தண்ணீரைக் கொடுக்கும் மலைகளே இன்று தண்ணீருக்காகத் தவிக்கும் நிலை!
“எல் நினோவை எதிர்கொள்ள அரசு தயாராகவில்லை!”
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், “இது ‘எல் நினோ’வின் தொடக்கம்தான். இந்த ஆண்டு ‘சூப்பர் எல் நினோ’வுக்கும் மேலாக, ‘காட்ஜில்லா எல் நினோ’ வரை செல்லும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனால் பகல் நேர வெப்பநிலை கோடைக்காலத்தைவிட அதிகமாக இருக்கும். நிலத்தடி நீர்மட்டம் சரியும். பயிர்களின் விளைச்சல் குறையும். கடும் வறட்சியின் பிடியில் சிக்கும். ஒரு பக்கம் பெருமழையும், இன்னொரு பக்கம் பெரும் வறட்சியும் ஏற்படும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ‘எல் நினோ’ பாதிப்புகளை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராகவில்லை” என்றார்.
கோவையிலும் கோரத்தாண்டவம்!
கோவை மாவட்டம், பொகலூர் சுற்றுவட்டாரத்தில் ‘எல் நினோ’ தாக்கத்தால் மழையில்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை, கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து கருகிவருகின்றன. கால்நடைகளுக்குத் தண்ணீர், தீவனம் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. “இதே நிலை நீடித்தால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும்” என்று பதற்றப்படுகிறார்கள் விவசாயிகள்.
“நாலு ஏக்கர்ல கரும்பும், மூணு ஏக்கர்ல வாழையும், ஒன்றரை ஏக்கர்ல தென்னையும் போட்டிருக்கேன். மழை கைகொடுக்கும்னு நம்பி நட்டேன். ஆனா மழை ஏமாத்திடுச்சு. பன்னிரண்டு போர்வெல்லும், ரெண்டு கிணறும் வத்திப்போச்சு. கரும்பு, வாழையெல்லாம் காய்ஞ்சு கருகிப்போச்சு. லட்சக்கணக்குல நஷ்டமாயிருச்சு. இப்படியே போனா மனுசங்க குடிக்கக்கூடத் தண்ணி இல்லாமப் போயிரும்” என்று வேதனைப்பட்டார் விவசாயி பழனிசாமி.
“கிணறு, போர்வெலெல்லாம் சுத்தமா வறண்டு கிடக்கு. இதனால, பயிருங்கல்லாம் காய்ஞ்சு கருகிடுச்சு. எங்களுக்கு எந்த வருமானமும் இல்லை. விவசாயம் தவிர, வேற எந்த வேலையும் தெரியாது. இந்த வயசான காலத்துல என்ன பண்ணுறதுன்னே தெரியாம தவிக்கிறோம். வறட்சியால பாதிக்கப்பட்ட விவசாயிங்களுக்கு அரசாங்கம் நிவாரண நிதி தரணும்” என்று கோரிக்கைவைத்தார் விவசாயி கிருஷ்ணசாமி.
அன்னூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் மதுபாலாவிடம் பேசியபோது, “போதிய மழை, நிலத்தடி நீர் இல்லாததால் பல கிராமங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதிகளைப் பேரிடர் மேலாண்மைத்துறை `வறட்சி பாதித்த பகுதி’ என அறிவித்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முடியும்” என்றார்.
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் கேட்டபோது, “பயிர்கள் பாதித்த பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் சர்வே நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியிருக்கிறோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
