வனச்சட்டத்தில் உரிமை பெற அரசு ஆவணங்கள் கட்டாயம் புலிகள் காப்பக துணை இயக்குனர் தகவல்
தேனி: 'வன உரிமை சட்டத்தின் கீழ் 75 ஆண்டுகள் வாழ்ந்ததற்கான அரசு ஆவணங்கள் ஆதாரமாக ஏற்று கொள்ளப்படும்' என புலிகள் காப்பக துணை இயக்குனர் விவேக் குமார் யாதவ் தெரிவித்தார்.
ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2006 வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா வழங்க அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
இதுபற்றி புலிகள் காப்பக துணை இயக்குனர் கூறியதாவது: மேகமலை விவகாரத்தில் 98 கிராமங்களில் உள்ளவர்களை வெளியேற்றுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. பட்டா உள்ளவர்களை வெளியேற்ற மாட்டோம். வன உரிமை சட்டத்தின் கீழ் உரிமை கேட்டு முறையாக விண்ணப்பிக்க வேண்டும். 2005 டிசம்பர் நிலவரப்படி 75 ஆண்டுகள் அப்பகுதியில் வாழ்ந்தற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அவை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பதிவுகள், நில அளவை, அரசு வரைபடங்கள், செயற்கைக்கோள் படங்கள், குத்தகைப் பதிவுகள், பழைய நில உரிமைப் பதிவுகள், முன்னாள் சமஸ்தானங்கள், மாகாணங்களின் பதிவுகள், பழைய கிணறுகள், புதைகுழிகள், பழங்கால குடியிருப்புகள், தொல்லியல் ஆராய்ச்சி பதிவு, உரிமை கோருபவர் அல்லாத கிராமத்தின் மூத்தவர்களின் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்த வாக்குமூலம் உள்ளிட்டவை தேவையாகும். இதேபோல் ஒரு சமூக குழுவுக்கு நில உரிமை வேண்டும் என்றால், பழைய கட்டமைப்பு படிவங்கள், புனித மரங்கள், கல்லறை தோட்டங்கள், காப்பு காடு அறிவிப்புக்கு முந்தைய அரசு பதிவுகள், கால்நடை மேய்ச்சல், விவசாயம் செய்ததற்கான ஆவணங்கள் வேண்டும். இவற்றில் ஏதாவது 2 முக்கிய ஆவணங்களை சமர்பிக்கலாம் என்றார்.