Politics
அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில், தற்போதைய அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிட்டார். இவர், திமுக வேட்பாளர் நல்லசிவத்தை விட 16 ஆயிரத்து 620 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “சட்டமன்றத் தேர்தலின் போது அமைச்சர் செங்கோட்டையன் குற்ற வழக்கு விவரங்களைத் தெரிவிக்கும் பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல்களைச் சான்றளித்துக் கையெழுத்திட்ட நோட்டரி வழக்கறிஞர்களின் உரிமம் காலாவதியாகிவிட்டது. எனவே, அத்தகைய சான்றொப்பங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரி ஏற்றது முறையற்றது. காலாவதியான நோட்டரி சான்றொப்பத்தை ஏற்ற கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அதிகாரியின் நடவடிக்கை சட்டவிரோதமானது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அப்போதே நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் தேர்தல் அதிகாரி அதைக் கருத்தில் கொள்ளவில்லை. எனவே, செங்கோட்டையனின் வெற்றியைச் செல்லாததாக அறிவிக்க வேண்டும். அவரது மனுவில் குறிப்பிட்டுள்ள அம்சங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளேன். செங்கோட்டையனின் வெற்றியைச் செல்லாததாக அறிவித்து, என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று (15.09.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)