நீலக்குறிஞ்சி பூக்களை காண பயணிகள் வருகை அதிகரிப்பு

மூணாறு: சொக்கர்முடிமலையில் நீலக்குறிஞ்சி பூக்களை பார்க்க செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மூணாறு அருகே மாட்டுபட்டி கொரண்டிக்காடு, சொக்கர்முடி ஆகிய மலைகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 'ஸ்டெரபாலந்தஸ் குந்தியானா' எனும் தாவரவியல் பெயர் கொண்ட நீலக் குறிஞ்சி பூக்கள் பெரும் அளவில் பூத்துள்ளன. அவற்றை பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாட்டுபட்டி கொரண்டிக்காடு மலையில் குறிஞ்சி பூக்களை பார்க்க கட்டணம் வசூலிக்க தனியார் தேயிலை கம்பெனிக்கு உரிமை இல்லை என்றபோதும், நுழைவு கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஆரம்பத்தில் நபர் ஒன்றுக்கு ரூ. 500, சிறுவர்களுக்கு ரூ. 250 என கட்டணம் வசூலிக்கப்பட்டதால் எதிர்ப்புகள் வலுத்தன. அதனால் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.250, 6 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ. 100 என கட்டணத்தை குறைத்தனர். எனினும் கட்டண வசூலை நிர்வாகம் கைவிட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேசமயம் சொக்கர்முடிமலையில் வனத்துறையினர் நபர் ஒன்றுக்கு ரூ. 200, சிறுவர்களுக்கு ரூ. 100, வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ. 400 என நுழைவு கட்டணம் வசூலிக்கின்றனர்.
அதன் நுழைவு பகுதி கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் இருந்து தேனி செல்லும் ரோட்டில் கோப் ரோடு பகுதியில் உள்ளதாலும், கட்டணம் சற்று குறைவு என்பதாலும் சொக்கர்முடி மலைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செப்.,5,6 ஆகிய நாட்களில் மட்டும் 3 ஆயிரம் பயணிகள் பூக்களை ரசித்தனர்.