நீலக்குறிஞ்சி பூக்களை பார்க்க கட்டணம் குறைப்பு தினமலர் செய்தி எதிரொலி

மூணாறு: கேரள மாநிலம் மூணாறு அருகே மாட்டுபட்டி கொரண்டிக்காடு, சொக்கர்முடி மலைகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளன. அவற்றை பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சொக்கர்முடி மலையில் வனத்துறை சார்பில் பயணிகளிடம் ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டினரிடம் ரூ.400 வசூலிக்கப்படுகிறது. மாட்டுபட்டி கொரண்டிக்காடு மலையில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி பூக்களை பார்க்க தனியார் தேயிலை கம்பெனி நிர்வாகம் நபர் ஒன்றுக்கு ரூ.500, சிறுவர்களுக்கு ரூ.250 நுழைவு கட்டணம் வசூலித்தது. இந்த கட்டண கொள்ளை தொடர்பாக செப்.4ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட மாவட்ட நிர்வாகம், கட்டணத்தை குறைக்க தனியார் தேயிலை கம்பெனிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நுழைவு கட்டணம் குறைக்கப்பட்டு, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.250, 6 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண வசூலை தேயிலை கம்பெனி நிர்வாகம் கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.