Religion
விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்

கூடலுார்: முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி அடித்து, கோவிலை சுற்றி வந்து விநாயகரை வணங்கின.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று மாலை நடந்தது. வளர்ப்பு யானைகளை மாயார் ஆற்றில் குளிக்க வைத்து, அலங்கரித்து மாலை அணிவித்து, வரிசையில் நிறுத்தப்பட்டன.
அங்குள்ள விநாயகர் கோவிலில் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, வளர்ப்பு யானைகள் கிருஷ்ணா, பொம்மி ஆகியவை தும்பிக்கையால் கோவில் மணியை அடித்தப்படி, கோவிலை சுற்றி வலம் வந்து, விநாயகரை வணங்கின.
அப்போது, கோவில் முன் வரிசையாக நின்ற வளர்ப்பு யானைகள் பிளிறியப்படி தும்பிக்கையை உயர்த்தி விநாயகரை வணங்கின. இந்த பூஜையை பார்த்த சுற்றுலா பயணிகள் வியப்படைந்தனர். தொடர்ந்து, வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உணவுடன், பொங்கல், பழங்கள் வழங்கப்பட்டன.
விழாவில், முதுமலை துணை இயக்குனர் வித்தியாதர், கூடலுார் டி.எப்.ஒ., தேவராஜ், வனச்சரகர் ராமர், வன ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.