Arts, culture, entertainment and media
“நாம் செய்ய வேண்டியதை தெலுங்கர்கள் செய்கிறார்கள்” - சிவகுமார் சல்யூட்!

'இசை மேதை', 'பாரத ரத்னா' எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் திரைப்படம் 'எம். எஸ்.: எ லெகசி ஆன் ஸ்கிரீன்(M.S. : A LEGACY ON SCREEN). இப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்குகிறார். இதில் எம். எஸ். சுப்புலட்சுமியாக ரஷ்மிகா மந்தானா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ்- ராக் லைன் என்டர்டெய்ன்மென்ட் - பென்னி வாசு பிலிம்ஸ் - ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் - ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்க விழா எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இசை அரங்கமாக திகழ்ந்த சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எம் .எஸ். சுப்புலட்சுமியின் குடும்ப வாரிசுகளும் , அவருடைய நலம் விரும்பிகளும், திரை உலகத்தை சார்ந்த தயாரிப்பாளர்களும், முன்னணி நட்சத்திர நடிகர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய திரையுலகின் நட்சத்திர நடிகருமான கமல்ஹாசன் கிளாப் அடித்து, படத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்களை.. இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து இசைத்து, அவருக்கு இசையஞ்சலியும் நடத்தினர்.
நிகழ்வில் சிவகுமார் கலந்து கொண்டு பேசுகையில், “கமல்ஹாசன் முன்னிலையில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது. ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த படத்தை தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தயாரிக்கிறார்கள். நாம் செய்ய வேண்டிய விசயத்தை அவர்கள் செய்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு ஒரு சல்யூட். இது பெருமிதமாகவும் இருக்கிறது.
அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி நான் சிறுவயதில் படித்திருக்கிறேன். அவர்களுடைய வீட்டில் பாட்டு கேட்பதற்கு ரேடியோ கூட இருக்காதாம். அருகிலுள்ள பூங்காவிற்கு சென்று தான் கேட்பார்களாம் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இருந்த பெண், இது போன்ற சபாக்களில் பாடுவதற்கு எப்படியெல்லாம் சதாசிவம் உதவி செய்தார் என்பதையும் படித்திருக்கிறேன். அந்த மகத்தான அம்மாவை பற்றி சுயசரிதை திரைப்படத்தை உருவாக்குகிறார்கள் என்றவுடன் அதற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளார் என்பதை கேள்விப்பட்டவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)