Lifestyle and human interest
ரூ.20 லட்சம் நகை பறிக்க முயற்சி ஜெயிலர் மகன் உட்பட 4 பேர் கைது
திருச்சி: திருச்சியில், டிராவல்ஸ் மேலாளரிடம், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிக்க முயன்ற, சென்னை புழல் சிறை ஜெயிலர் பாரத் கென்னடியின் மகன் சுதன்ராம் தேவேந்திரா, 32, உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன், 52. மலீஷா டிராவல்ஸ் நிறுவன மேலாளர்.
இவர், நகைகளை மொத்தமாக வாங்கி, விற்கும் தொழிலும் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம், இவர் திருச்சி வந்து, வெளிநாட்டில் இருந்து வந்த, சிவகங்கையை சேர்ந்த பரமேஸ்வரி, பாரதி ஆகிய இரு பெண்களிடம், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைளை வாங்கியுள்ளார்.
அதன்பின், காந்தி மார்க்கெட், வாழைக்காய் மண்டி அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த நால்வர், வெங்கடேஷ்வரன் வைத்திருந்த நகை பொட்டலத்தை பறிக்க முயன்றனர். அவர் சத்தமிட, அருகில் இருந்தவர்கள், நகை பறிக்க முயன்ற நால்வரையும் பிடித்து, காந்தி மார்க்கெட் போலீசில் ஒப்படைத்தனர்.
வெங்கடேஷ்வரன் புகாரில், சென்னை புழல் சிறை ஜெயிலர் பாரத் கென்னடியின் மகன் சுதன்ராம் தேவேந்திரா, 32, சென்னையை சேர்ந்த கருணாகரன், 41, சிவகங்கையை சேர்ந்த அருள்மணி, 32, மகேந்திரன், 48, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வெங்கடேஷ்வரன் நகை வியாபாரம் செய்வதை தெரிந்து கொண்டு, அவரை பின்தொடர்ந்து நகை பறிக்க முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.