Arts, culture, entertainment and media
மாறுகிறார்கள் மக்கள் !தனியார் கேபிள் டிவி இணைப்புக்கு ... அரசு செட் டாப் பாக்சில் வந்தது சிக்கல்

கோவை: அரசு கேபிள் டிவி சேவையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்னையால், அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் தனியார் கேபிள் இணைப்புக்கு மாறி வருகின்றனர்.
கோவையில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட அரசு கேபிள் டிவி இணைப்புகள் உள்ளன. பெரும்பாலான தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், அரசு கேபிள் டிவி இணைப்பை பெற்று நடத்தி வருகின்றனர்.
அரசு வழங்கி உள்ள செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதால் ஒளிபரப்பில் தெளிவில்லை என்றும், ஆக. 17 முதல் அரசு கேபிள் டிவி இணைப்பில் உள்ள செட்டாப் பாக்ஸ்களை ஆன் செய்யவும், ஆப் செய்யவும் முடியவில்லை என்றும், மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.
சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாகீர் கூறியதாவது:
செட் டாப் பாக்ஸ் கோளாறால் கோவையில் உள்ள பல ஆயிரம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சரியான ஒளிபரப்பை வழங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். புதிய இணைப்புகளை கொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.
வீடு மாறியவர்களுக்கு, இணைப்பை மாற்றி கொடுக்க முடியவில்லை. இந்த செட்டாப் பாக்ஸ்களை வழங்கியுள்ள தனியார் நிறுவனத்துக்கு, கொடுக்க வேண்டிய பல கோடி ரூபாய் கட்டணத்தை செலுத்தாமல், கடந்த ஆட்சியில் நிலுவை வைத்து விட்டதாக தெரிகிறது. அதனால் அந்நிறுவனம் இந்த தொழில்நுட்ப பிரச்னையை சரி செய்ய மறுக்கிறது.
இதனால் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணத்தை வசூலிக்க முடியவில்லை. சரியாக சேனல்களை பார்க்க முடியாததால், அரசு கேபிள் இணைப்பு பெற்றுள்ளவர்கள், வேறு தனியார் கேபிள் இணைப்புக்கு மாறி வருகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண கோரி, சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.