திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 13ல் தொடக்கம்: மாலை 4:00 மணிக்கு கவுனி தாண்டுகிறது
சென்னை:ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில், திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், வரும் 13ம் தேதி தொடங்குகிறது. திருக்குடைகள் மாலை 4:00 மணிக்கு கவுனி தாண்டுக்கின்றன.
ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், புரட்டாசி மாத பிரம்மோத்சவத்தின்போது, ஏழுமலையான் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில், வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், சென்னையில் இருந்து வெண்பட்டு குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.
நடப்பாண்டு ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில், திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், வரும் 13ம் தேதி, சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன், காலை 10:00 மணிக்கு தொடங்க உள்ளது.
மதியம் 12:30 மணிக்கு, பைராகி மடத்தை அடைக்கிறது. பின், மாலை 4:00 மணிக்கு, திருக்குடைகள், வால்டாக்ஸ் சாலை வழியாக, கவுனி தாண்டுகின்றன. பின், சூளை நெடுஞ்சாலை, ஓட்டேரி மேம்பாலம் வழியாக, அயனாவரம் காசி விசுவநாதர் கோவிலுக்கு செல்கிறது.
மறுநாள், அதாவது செப்.,14ல், காலை 6:00 மணிக்கு திருக்குடை ஊர்வலம் தொடங்கி, பெரம்பூர், திரு.வி.க.நகர் வழியாக, வில்லிவாக்கம் சென்று, சவுமிய தாமோதர பெருமாள் கோவில் அடைகிறது.
செப்.,15ல், பாடி, முகப்பேர், அம்பத்துார் வழியாக, இரவு திருமுல்லைவாயல் செல்கிறது. செப்.,16ல், ஆவடி இந்து கல்லுாரி, பட்டாபிராம், திருநின்றவூர், வழியாக வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் செல்கிறது.
செப்., 17ல், திருப்பாச்சூர், கனகம்மாள் சத்திரம் வழியாக, கீழ்த்திருப்பதி எஸ்.எம்.எஸ்.ஓ., சபா கல்யாண மண்டபம் செல்கிறது.
செப்., 18ல், காலை 6:00 மணிக்கு திருப்பதி அடைந்து, மாலை 3:00 மணிக்கு, பெருமாளுக்கு திருக்குடைகள் சமர்பிக்கப்பட உள்ளன. இத்திருக்குடை ஊர்வலத்தில், பக்தர்கள் பங்கேற்று ஏழுமலையான் அருள் பெற, ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.