Politics
முடக்கம்! -ஆளும்கட்சி அலட்சியம்!

தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திலுள்ள மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள், ஒன்றியங்கள், கிராம பஞ்சாயத்துகள் மக்கள் பிரதிநிதிகளால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கான பதவிக்காலம் இந்தாண்டு இறுதிவரை உள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி மாதம் ஒருமுறை மன்றக் கூட்டம் நடத்தவேண்டும். தவறும்பட்சத்தில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை கட்டாயம் கூடி மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் விவாதித்துச் செயல்படுத்தவேண்டும். த.வெ.க. ஆட்சியமைந்தபின் அதில் சிக்கலை உருவாக்கியுள்ளார்கள் ஆட்சியாளர்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஒன்றியக்குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவர் சேஷா வெங்கட் தலைமையில் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் கடிதம் அனுப்பப்பட்டு, கூட்டத் துக்கு வருகை தந்திருந்தனர். மன்ற அரங்கில் சேர்மன், உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். பி.டி.ஓ.க்கள், பொறியாளர் உட்பட அதிகாரிகள் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை. இதனால் கோபமான சேர்மனும், கவுன்சிலர்களும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து ஒன்றியக்குழு பெருந்தலைவர் சேஷா வெங்கட் கூறும்போது, “"பி.டி.ஓ., டெபுடி பி.டி.ஓ, பொறியாளர் உட்பட அதிகாரிகள் யாரும் மன்றக் கூட்டத்துக்கு வரவில்லை. ஏன் வரவில்லை என தகவலும் தெரிவிக்கவில்லை. கூட்டத்துக்கு வருகைதந்தோம் என எங்களிடம் கையெழுத்து மட்டும் வாங்கினார்கள் அலுவலக ஊழியர்கள். இது எப்படி சரி? ஆட்சி மாறிவிட்டது என்பதற்காக நாங்கள் மக்கள் பிரதிநிதி யில்லை என்பதாகிவிடாது. அரசு அதிகாரி களும் ஆட்சிக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வது ஏற்புடையதல்ல''’என்றார்.
"திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பேரூராட்சி தலைவர் செல்வபாரதி மீது 8 கவுன்சிலர்கள் இணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறோம் எனச் சொல்லி கடிதம் தந்து 3 மாதமாகிறது, இதுவரை அதிகாரிகள் அதன்மீது எந்த நடவடிக்கை யும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவைத் துள்ளார்கள். தெருவிளக்கு எரியவில்லை, கால்வாய் சரியில்லை என புகார் சொன்னாலும் கண்டுகொள்ளவில்லை, மக்கள் இருட்டில் வாழ்கிறார்கள். அதனால் நாங்கள் இந்த கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டோம்'' என்றார் புதுப்பாளையம் கவுன்சிலரும், தி.மு.க. ந.செ.வுமான சீனுவாசன்.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி சேர்மன் நம்மிடம், "அவசர வேலை என்றால் பொதுநிதியிலிருந்து பணம் எடுத்து செலவுசெய்துவிட்டு பின்னர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் வைத்து ஒப்புதல் பெறலாம். நிதி ஒதுக்கி எதற்கும் டெண்டர் விடப்படுவதில்லை என்பது ஒருபுறமென்றால் பொதுநிதியி லிருந்தும் ஒரு பணியும் செய்யக்கூடாது என நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ஆனந்த் தரப்பில் கமிஷனர் களுக்கு உத்தரவுபோட்டுள்ளார்களாம். அதனால் எந்த வேலையும் செய்யமாட்டோம் என்கிறார்கள் அதிகாரிகள். இதனால் தெருவிளக்குள்கூட மாற்றமுடியாமல் தவிக்கிறார் கள். இத்தனைக்கும் தெருவிளக்குகள் தனியார் நிறுவனத் துக்கு டெண்டர்தான் விடப்பட்டுள்ளது. அவர்களிடம் எரியாத விளக்குகளை மாற்றுங்கள் எனச்சொன்னால் எங்களுக்கான பணம் வரவில்லை எனச் சொல்கிறார்கள்.
நகராட்சி, மாநகராட்சி பணிகள் எது நடந்தாலும் கவுன்சிலர்கள், சேர்மன் கமிஷன்களைத் தாண்டி அதிகாரி களுக்கு எனத் தனியே 2% தருவார்கள் ஒப்பந்ததாரர்கள். த.வெ.க. ஆட்சி அமைந்தபின் அதிகாரிகளுக்கான கமிஷனை 5 சதவிதமாக உயர்த்தி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சருக்கு தரவேண்டும் என தனியே 10% வாங்குகிறார்கள். முடிந்த வேலைக்கும் கமிஷன் கேட்பதால் ஒப்பந்ததாரர்கள் கோபத்திலிருக்கிறார்கள். வேலைதான் முடிஞ்சிடுச்சி, உங்க கமிஷன் வாங்கிட்டிங்கல்ல, பில் க்ளீயர் செய்துவிடுங்கன்னு சொன்னால் அமைச்சர் ஆபீஸிலிருந்து எந்த பில்லும் க்ளீயர் செய்யக்கூடாதுன்னு வாய்மொழியா சொல்லியிருக்காங்கன்னு சொல்றாங்க. நாங்க லஞ்சம் வாங்கறதில்லைன்னு சொல்லிட்டு அதிகாரிகள் வழியா வாங்கிக்கிட்டு இருக்காங்க த.வெ.க. அமைச்சர்கள்.
இந்தாண்டு பருவமழை தள்ளிப்போயுள்ளது, ஆறு, ஏரி, குளங்களில் தண்ணீரில்லை. தமிழ்நாடு முழுவதும் குடி தண்ணீர் தட்டுப்பாடு. மக்கள் சாலைமறியல் செய்யத்துவங்கி யுள்ளார்கள். இதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு டேங்கர் லாரிகள் வழியாக வார்டுகளுக்கு தண்ணீர் அனுப்ப வேண்டும். கடந்த ஆண்டுகளில் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது குடிதண்ணீர் ஏற்பாடுசெய்து மக்களின் தாகத்தைத் தீர்த்தோம். இப்போது அப்படி ஏற்பாடுசெய்ய நாங்கள் தயாராக இருந்தும் அதிகாரிகள் ஒத்துழைப்பில்லை. நாங்க சொல்றதை செய்ங்கன்னு உத்தரவாகச் சொன்னால் அமைச்சர் ஆபிஸ்லயிருந்து செய்யக்கூடாது உத்தரவு போட்டிருக்கறதா சொல்லி நிதியை விடுவிக்க மறுக்கறாங்க. இந்த மாத இறுதியிலிருந்து பருவமழை தொடங்கப் போகிறது. தெருக்கால்வாய் சுத்தம் செய்யாமல் இருக்கிறது. இதனால் கால்வாயில் செல்லவேண்டிய மழைநீர் சாலையில் ஓடும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் போகும். இதையும் சரிசெய்ய மறுக்கிறார்கள். மழை வந்தால் சென்னை மாநகரம் மட்டும் பாதிக்கப்படும் என்பதுபோல் அங்கே மட்டும் அமைச்சர்களை கண்காணிக்கச் சொல்லி நியமித்துள்ளார்கள். சென்னையைத் தாண்டி ஊரில்லையா? மக்கள் இல்லையா?''’எனக் கேட்டார்.
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் முடங்கியுள்ளன. ரீல்ஸில் மட்டுமே நிர்வாகம் நடக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)