Politics
“தே.மு.தி.க. மீது குற்றம் சுமத்துவது என்னுடைய நோக்கம் இல்லை” - திருமாவளவன் பேட்டி!

பரபரப்பான அரசியல் சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “திமுக தன்னை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சில கருத்துகளை நான் ஒரு விழாவில் பேசினேன். தேமுதிக மீது குற்றம் சுமத்துவது என்னுடைய நோக்கம் இல்லை.
தேர்தல் நேரத்தில் தேமுதிகவுக்கு 10 இடங்கள் கொடுத்தபோது, அதை வரவேற்று அதற்கான நியாயத்தைச் சொன்ன முதல் நபர் நான்தான். வேறு யாரும் அப்படி வரவேற்கவில்லை. அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உடனிருந்த கட்சிகள் திமுகவை வெறும் பதவிக்காக விட்டு வெளியேறிவிட்டார்கள் என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோது, அவர்களுக்கு துரோகப் பட்டங்கள் சூட்டப்பட்டன. அப்போது, உடனிருந்த கட்சிகள் வெளியேறுவதற்கு இதுதான் மட்டுமே காரணமா? வேறு காரணங்கள் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.
காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு பதவி ஆசை மட்டும்தான் காரணமா?. வேறு காரணங்கள் இல்லையா? என்ற கோணத்தில்தான் நான் சில கருத்துகளைச் சொன்னேன். அதேபோல், தேமுதிக கூட்டணிக்குள் வந்ததில் ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சி மட்டும்தான் இருந்திருக்க முடியுமா என்ற ஒரு கேள்வியையும் நான் எழுப்பினேன். அவ்வளவுதான். அவர்களுக்கு ஏன் 10 இடங்கள் கொடுத்தார்கள், அவர்களை ஏன் கூட்டணியில் சேர்த்தார்கள் என்ற கோணத்தில் நான் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. அந்த பேச்சை திருப்பிக் கேட்டால் அது தெரியும்.
தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டதனால், ஏற்கனவே உடனிருந்த கட்சிகளுக்கு கட்டாயம் மகிழ்ச்சி இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த உறவு பாதிக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்க முடியும் என்ற கோணத்தில்தான் நான் ஒரு கருத்தைச் சொன்னேன். ஆனால், நான் தேமுதிகவை குறை சொன்னது போல பிரேமலதா விஜயகாந்த் புரிந்துகொண்டிருக்கிறார். அவருடைய கருத்தை நான் எதிர்க்க விரும்பவில்லை. அவருடைய கருத்து கருத்தாகவே இருக்கட்டும். இதுகுறித்து ஏற்கனவே இரண்டு நாட்களாக பதில் சொல்லிவிட்டேன். திரும்பத் திரும்ப ஒரே கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)