Crime, law and justice
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்ட வழக்கறிஞர்களால் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர், நுகர்வோர் கோர்ட்டை, திருவண்ணாமலைக்கு மாற்றும் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 11:30 மணிக்கு விழுப்புரம்-பாண்டி சாலை, நுகர்வோர் கோர்ட்டில் இருந்து, வழக்கறிஞர்கள், சங்கத் தலைவர்கள் மாரிமுத்து, ராஜகுரு, பன்னீர்செல்வம், ராதாகிருஷ்ணன் தலைமையில் ஊர்வலமாக வந்து, திடீரென கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். அங்கு வழக்கறிஞர்களை, விழுப்புரம் டவுன் போலீசார், கலெக்டர் அலுவலக கதவை மூடி தடுத்து நிறுத்தினர்.
கலெக்டர் வங்கியாளர்களுக்கான கூட்டத்தில் இருந்ததால், அவரது நேர்முக உதவியாளர், வழக்கறிஞர்களை சந்தித்து மனுவை பெற்று விசாரித்தார். ஆனால், கலெக்டர் வரவேண்டும் எனக்கூறி, கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு, வழக்கறிஞர்கள் கலெக்டரின் அறை முன்பு திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, வங்கியாளர்கள் கூட்டத்திலிருந்த கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் வந்து, வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, வழக்கறிஞர்கள் கூறுகையில், 'சொந்த கட்டடம் இல்லாத மற்றும் வழக்குகள் குறைவாக வரும் நுகர்வோர் கோர்ட்டுகளை, செலவினங்களை காரணம் காட்டி அரசு மாற்ற முயற்சித்துள்ளது. 32 கோர்ட்டுகளை, 14 ஆக குறைக்க உள்ளனர். கடலுார், விழுப்புரத்தில் சொந்த கட்டடம் இல்லை என்பதால் தான் மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதனால், விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டுக்கு, பெருந்திட்ட வளாகத்தில் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்,' என்றனர்.
கலெக்டர் பதிலளிக்கையில், 'நுகர்வோர் கோர்ட் விவகாரம் அரசின் கொள்கை முடிவு. தங்களின் கோரிக்கை அரசுக்கு பரிந்துரைக்கப்படும். விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டிற்கு அரசு கட்டடம் தேவை என கோரினால், அதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்,' என்றார். இதனையடுத்து, வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.