Politics
'சட்டமன்ற நேரலையில் நடக்கும் மெகா மோசடி?;எதிர்க்கட்சிகளை முடக்கத் தவெக அரசு போடும் வியூகம்- விவரிக்கும் வழக்கறிஞர் துரை அருண்

சட்டமன்றம் என்பது மக்களாட்சியின் மிக முக்கியமான அங்கமாகும். அவைக்குள் நடக்கும் விவாதங்கள் அனைத்தும் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் சட்டமன்ற நேரடி ஒளிபரப்பில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகச் செய்யப்படுவதாகக் கூறப்படும் இருட்டடிப்பு மற்றும் அவைக்குள் திட்டமிட்டு உருவாக்கப்படும் அரசியல் பிம்பங்கள் என சட்டப் பார்வையை முன்வைக்கிறார் வழக்கறிஞர் துரை அருண்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் துரை அருண் நக்கீரன் டிவிக்கு கொடுத்த பிரத்யேக நேர்காணலில் இதுகுறித்து கூறுகையில், ''தற்போதைய சட்டமன்ற விவாதங்களின் நேரடி ஒளிபரப்பில் மிகப்பெரிய மோசடியும் இருட்டடிப்பும் அரங்கேறி வருகிறது. எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினோ எழுந்து நின்று பேசும்போது, ஆளும் தவெக கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் உறுப்பினர்களும் அவைக்குள் எழுந்து நின்று கத்துகிறார்கள், கூச்சல் போடுகிறார்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்குப் புறம்பான தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நேரடி ஒளிபரப்பில் ஆளுங்கட்சியினரின் இந்த ஒழுங்கீனமான நடவடிக்கைகளைக் காட்டுவதே இல்லை.
மாறாக, சபாநாயகரின் முகத்தை மட்டுமே காட்டி 'உட்காருங்கள்' என்று அவர் பேசுவதை ஒளிபரப்புகிறார்கள்.அதே நேரத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சாதாரணமாக எழுந்து நின்றால் கூட அதை உடனே கேமராவில் பெரிதாகக் காட்டுகிறார்கள் . இதனால், பொதுமக்கள் மத்தியில் எதிர்க்கட்சியினர்தான் அவையின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கிறார்கள் என்ற தவறான கற்பிதம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது . மேலும், அவைக்குள் 'உதயநிதி வெர்சஸ் விஜய்' என்றொரு அரசியல் பிம்பத்தைக் கட்டமைக்க ஆளுங்கட்சி தீவிரமாக முயல்கிறது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, 'உங்களுக்கு எந்தக் குறுக்கீடும் இருக்காது' என்று துணை சபாநாயகர் உறுதி அளிக்கிறார். இதன் மூலம் அதிமுக தங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்றும், திமுகவை மட்டுமே குறிவைத்துத் தாக்குவோம் என்றும் ஆளுங்கட்சி மறைமுகமாக உணர்த்துகிறது.முதலமைச்சர் விஜய் தனக்குக் கீழ் உள்ள காவல் மற்றும் நிதித்துறை மானியக் கோரிக்கைகளுக்கு அவைக்குள் நேருக்கு நேராக நின்று தர்க்க ரீதியாகப் பதில் சொல்லத் தெரியாமல் தவிக்கிறார். மாறாக, சில அமைச்சர்களைத் தனக்குப் பதிலாகப் பேச வைக்கும் 'பிராக்ஸி' முதலமைச்சராகவே அவர் செயல்படுகிறார்.
அரசியல் சாசன விதி 164 -இன் படி, அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு கொண்டது என்றாலும், முதலமைச்சர் விவாதங்களில் இருந்து தப்பியோட முடியாது. மானியக் கோரிக்கை புத்தகங்களை இரவு 8 மணிக்கு எதிர்க்கட்சிகளுக்குக் கொடுத்துவிட்டு, மறுநாள் காலையிலேயே விவாதத்திற்கு வரச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? ஆறு சிலிண்டர் தருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது 2 லட்சம் ரூபாய்க்குக் கீழ் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே 3 சிலிண்டர் என்று பட்ஜெட்டில் அறிவித்து மக்களை ஏமாற்றியுள்ளனர். கஜானா காலி என்று கூறி ஏழை விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய மறுக்கும் இந்த தவெக அரசு, எம்.எல்.ஏ-க்களுக்குப் புதிய சொகுசு கார்கள் வாங்கவும், 1,200 கோடியில் புதிய சட்டமன்றம் கட்டவும் நிதி ஒதுக்குவது இவர்களின் விளம்பர அரசியலையே தோலுரித்துக் காட்டுகிறது'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)