Politics
கஞ்சா... மது... ரௌடிகள்... ‘திக்திக்’ தஞ்சாவூர் அரசுக் குடியிருப்பு!

“காலி வீடுகளுக்குள்ள கஞ்சா பதுக்கி வெச்சு விக்கிறாங்க. இளைஞர்கள் கும்பலா வந்து வீட்டுக்குள்ள போவாங்க; கொஞ்ச நேரத்துல பார்த்தா வீடே புகையா இருக்கும்.
“பகலில் குழந்தைகள் விளையாடும் மைதானமாகவும், இரவில் கஞ்சாவும் மதுவும் விற்கும் ஸ்பாட்டாகவும் விளங்குகிறது. போதாக்குறைக்கு, பூட்டிக்கிடக்கும் வீடுகளைத் திறந்து குற்றவாளிகள் பதுங்குகின்றனர். வாழ்வதற்காக வீடு கேட்டோம்... இப்போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறோம்’’ என்று `பகீர்’ புகார் கிளப்புகிறார்கள் தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி அரசுக் குடியிருப்புவாசிகள்.
தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார் பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட இந்தக் குடியிருப்பில், நகரப் பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டவர்களுக்கும், வீடில்லாதவர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த குடியிருப்பு, கடந்த சில ஆண்டுகளாகப் பிரச்னைகளின் கூடாரமாக மாறிவிட்டதாகக் குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். கழிவுநீர் வசதி, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளுடன், நகருக்கு வெளியே இருப்பதால் வேலைக்குச் செல்வதில் ஏற்பட்ட சிரமம் உள்ளிட்ட காரணங்களால் பலர் வீடுகளை காலி செய்துவிட்டனர்.
இதனால் சுமார் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் காலியாகக் கிடப்பதாகவும், சில வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி சமூகவிரோதிகள் காலி வீடுகளில் பதுங்குவதுடன், கஞ்சா விற்பனை, மது விற்பனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாகக் குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் சாந்தி என்பவர் பேசுகையில், “எங்களுக்கு இங்க வீடு ஒதுக்கி எட்டு வருஷத்துக்கு முன்னாடி குடிவந்தோம். அப்பல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லை. இப்ப சில வருஷமா கழிவுநீர் போக வசதி இல்லை. குடிநீருக்குத் தட்டுப்பாடு. சுகாதாரமும் சரியில்லை. ஊருக்கு வெளியே இருக்கறதால வேலைக்குப் போயிட்டு வர்றதுல சிரமம். இதனால பல பேரு வீட்டைக் காலி பண்ணிட்டு, உள்வாடகைக்கு விட்டுட்டுப் போயிட்டாங்க. யாரு குடியிருக்காங்கன்னே தெரியாத நிலைமை ஆயிடுச்சு. அடிக்கடி தகராறு நடக்கும். ஆயுதங்களோட கும்பலா வந்து அடிச்சுக்குவாங்க. எங்களுக்கெல்லாம் எப்பவும் `திக்திக்’னுதான் இருக்கும். தட்டிக்கேட்டா நம்மளையும் அடிப்பாங்க. பயத்துல யாரும் கண்டுக்காம இருந்ததுதான் சமூக விரோதிகளுக்குச் சாதகமாயிடுச்சு. இப்ப நிலைமை ரொம்ப மோசமா இருக்கு” என்றார்.
குடியிருப்புவாசிகளில் மேலும் சிலர் கூறுகையில், “காலி வீடுகளுக்குள்ள கஞ்சா பதுக்கி வெச்சு விக்கிறாங்க. இளைஞர்கள் கும்பலா வந்து வீட்டுக்குள்ள போவாங்க; கொஞ்ச நேரத்துல பார்த்தா வீடே புகையா இருக்கும். வெளிய வரும்போது நிதானமே இருக்காது. ராத்திரியில மது விற்பனையும் நடக்குது. கார்ல வர்றவங்க ராத்திரி வீட்டுல தங்கிட்டு, விடிஞ்சதும் போயிடுறாங்க. அவங்க யாரு, எங்கருந்து வர்றாங்கன்னே தெரியலை.
பல வீடுகளோட பூட்டு உடைஞ்சு, கதவு சும்மா சாத்தியே கிடக்கு. குடியிருக்க முடியாத சூழலால பலரும் வீட்டைக் காலி பண்ணிட்டாங்க. 400-க்கும் மேற்பட்ட வீடுகள் இப்போ ஆளில்லாம கிடக்குது. இது பத்தி வல்லம் டி.எஸ்.பி-யா இருந்த காயத்ரிக்குத் தகவல் போக, ஒருநாள் காலை 6 மணிக்கே டி.எஸ்.பி தலைமையில நூறு போலீஸார் வந்து, வீடு வீடா கதவைத் தட்டி சோதனை பண்ணி, சிலரைக் கைது பண்ணிட்டுப் போனாங்க. ஆனா, அதுக்கப்புறமும் நிலைமை அப்படியேதான் இருக்கு” என்றனர்.
சமூக ஆர்வலரான பனசை அரங்கன் இது பற்றிப் பேசுகையில், ‘`கஞ்சா பார்ட்டிகளுக்கு ஏற்ற வசதியான இடமாக இந்தக் குடியிருப்பு மாறிவிட்டது. அதேபோல் நகர்ப் பகுதியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும், காவல் நிலையங்களில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளாக இருக்கும் ரௌடிகளும் இங்கு தஞ்சமடைந்துள்ளனர். போதைப் பொருள்களின் மினி ஹப்பாக மாறிவிட்டதால், சமூகவிரோதிகள் சங்கமிக்கும் பாதுகாப்பான இடமாகிவிட்டது.
செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பிறகு, இங்கு பதுங்கியிருந்த ஜெகதீசன் என்பவரையும், கஞ்சா விற்பனை செய்த பிரசாந்த், பிரதாப் ஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இங்கு நடக்கும் சமூகவிரோதச் செயல்களால், குடியிருப்பவர்கள் நிம்மதியிழந்து வாழ்ந்துவருகின்றனர். வீடுகள் ஒதுக்கப்பட்ட பலர் வசிக்காமல் உள்வாடகைக்கு விட்டிருக்கின்றனர். விதியை மீறி இருப்பவர்களையும், பதுங்கியிருப்பவர்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அலட்சியமாக எடுத்துக் கொண்டால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் அசம்பாவிதம் நடக்கக்கூடும். தஞ்சாவூர் எஸ்.பி சாட்டையைச் சுழற்றி, இங்கு நடக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிசெய்ய வேண்டும்’’ என்றார்.
தஞ்சாவூர் எஸ்.பி சுந்தரவதனத்திடம் பேசினோம். ‘`குடியிருப்பு முழுவதுமாக சோதனை நடத்தப்பட்டது. இதில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறோம். குற்றச் செயல்கள் நிகழாத வகையில் அந்தப் பகுதி முழுமையாக போலீஸாரால் கண்காணிக்கப்பட்டுவருகிறது. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.
அரசு கொடுத்த வீடு... குற்றவாளிகளுக்குப் புகலிடமாகிவிடக் கூடாது என்பதுதான் அங்கு வசிக்கும் மக்களின் எதிர்பார்ப்பு!
