பணம், நகைகளை கொள்ளையடித்து தப்பிய கும்பல் சினிமா பாணியில் மடக்கி பிடித்த போலீசார்

உளுந்தூர்பேட்டை: கோயம்புத்துாரில் பணம், நகைகளை கொள்ளையடித்து தப்பிய கும்பலை, உளுந்துார்பேட்டை போலீசார் சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர்.
கோயம்புத்துாரில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு காரில் மர்ம நபர்கள் தப்பிச் செல்வதாக பல்வேறு மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும், கள்ளக்குறிச்சி டோல்கேட் பகுதியில் எஸ்.பி. ஷஹ்னாஸ் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இத்தனை சோதனைக்கு பின்னரும் அங்கிருந்து கார் தப்பி சென்றது. உடன் சுதாரித்த போலீசார், தப்பிய காரை பின் தொடர்ந்து சென்றனர். தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்துார்பேட்டை போலீசாரை, உஷார் படுத்திக் கொண்டே சென்றனர்.
உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி.. அசோகன் தலைமையிலான போலீசார், எம்.எஸ்., தக்கா அருகே தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை குறுக்கே பேரி காடுகளை வைத்தும், வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி தடுப்புகளை ஏற்படுத்தியும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை 4:00 மணியளவில் மர்ம நபர்கள் வந்த காரை சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர். காரில் இருந்த 4 பேரையும் போலீசார், உளுந்தூர்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஷஹ்னாஸ், உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி., அசோகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பத்தில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்,தொழிலதிபர் ஒருவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பியது தெரியவந்தது.
கோயம்புத்துார் அடுத்த பந்தய சாலை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.