கோயம்புத்துாரில் நகை, பணம் கொள்ளை மாடூர் டோல்கேட்டில் எஸ்.பி., அதிரடி ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே டோல்கேட்டில் எஸ்.பி., வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்துார் பகுதியில் பல லட்ச ரூபாய் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த கும்பல் கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் டோல்கேட் வழியாக காரில் செல்வதாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.பி., ஷஹ்னாஸ் தலைமையில், டி.எஸ்.பி., கலையரசன், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் உட்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மதியம் 3:00 மணியளவில் டோல்கேட் பகுதியில் சேலம் மார்க்கத்தில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படத்தை வைத்து கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர்.
சந்தேகிக்கும்படி ஒரு காரில் இருந்தவர்களையும், பஸ்சில் பணம் எடுத்துச் சென்ற ஒருவரிடமும் விசாரணை செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு ஆய்வு மேற்கொண்டதால் நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தொடர்ந்து, மாலை 4:00 மணியளவில் டோல்கேட்டை கடந்து செல்ல வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.