கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தல்
பல்லடம்:கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு பல்லடம் உலகத் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவன சுந்தர்ராஜன் கூறியதாவது:
திருப்பூர், கோவை மாவட்டத்தில், பல லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. விவசாய விளைபொருட்களை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதற்காக துவங்கப்பட்ட எங்கள் நிறுவனத்தில் 1,200க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தென்னையில் இருந்து இயற்கை பானமான நீராவை தயாரித்து, 'தென்னீரா' என்ற பெயரில் தமிழகம், பிற மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட, கள்ளுக்கான தடையை அரசு மறுபரிசீலனை செய்து நீக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில், 3 கோடி தென்னை மரங்கள் உள்ள நிலையில், அவற்றை முறையாக பயன்படுத்தினால் விவசாயிகளின் வருவாய் உயரும். எனவே,கள் விற்பனைக்கான தடையை நீக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.