Sport
‘டர்ப் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்’ கோப்பை வென்றது இந்துஸ்தான்
கோவை: இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில்(கோவை கிளை) சார்பில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையேயான ‘டர்ப் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்–2026’ போட்டி, சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில் உள்ள ‘டர்ப்’ மைதானத்தில் இரு நாட்கள் நடந்தது.
தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆதரவுடன் ‘டிரீம்ஸ் ஈவென்ட்ஸ்’ இப்போட்டிகளை நடத்தியது; மீடியா பார்ட்னர் ஆக ‘தினமலர்’ கரம் கோர்த்திருந்தது.
இப்போட்டியில், முன்னணி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் எட்டு ஓவர் கொண்ட ‘லீக்’ போட்டிகள் நடந்தன.
நேற்று ‘நாக் அவுட்’ முறையில் போட்டிகள் நடந்தன. இறுதிப்போட்டியில் இந்துஸ்தான் கிரிக்கெட் கிளப் அணியும், அன்னபூர்ணா ஸ்குவார்ட் அணியும் மோதின. அன்னபூர்ணா ஸ்குவார்ட் அணியினர், 8 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 61 ரன் எடுத்தனர்.
இந்துஸ்தான் கிரிக்கெட் கிளப் அணி 7.3 ஓவர்களில் 62 ரன் எடுத்து ‘டர்ப் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் முதல் கோப்பையை தட்டி சென்றது. முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் காசோலை, கோப்பை, மெடல்கள் வழங்கப்பட்டன.
இரண்டாம் இடம் பிடித்த அன்னபூர்ணா ஸ்குவார்ட் அணிக்கு ரூ.15 ஆயிரம் காசோலை, கோப்பை, மெடல்கள் வழங்கப்பட்டன. இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் தேசிய கிழக்கு மண்டல இயக்குனர் சாமிநாதன் பரிசுகள் வழங்கினார்.
கோவை கிளை தலைவர் பிரகதீஸ்வரன், செயலாளர் ஆதி பாண்டியன், துணை செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் கோகுல், டிரீம்ஸ் ராஜேஷ், இ பிகைண்ட்ஸ் நிறுவனர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.