இலவச வேட்டி, சேலைக்கு கூலி நிர்ணயிக்க ஐவர் குழு
ஈரோடு:இலவச வேட்டி, சேலைக்கான கூலியை நிர்ணயம் செய்ய, கைத்தறி மற்றும் துணி நுால் துறை ஒரு குழுவை நியமித்துள்ளது.
வரும் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடைகளில், அரிசி கார்டு தாரர்களுக்கு வழங்க, 1.77 கோடி இலவச வேட்டி, 1.77 கோடி இலவச சேலை உற்பத்திக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்பு, 3.75 மீட்டர் நீள, அகலவேட்டி தயாரிக்க, 24.30 ரூபாய் கூலியாக அரசு வழங்கியது. தற்போது, 2 மீட்டராக குறைத்துள்ளதால், 14.68 ரூபாய் மட்டுமே கூலி கிடைக்கும். எனவே வேட்டி பணிக்கு ஏற்ப, 24.48 ரூபாயாகவும், சேலைக்கு, 63.36 ரூபாயாக கூலியை உயர்த்தி வழங்க விசைத்தறி நெசவாளர்கள் கோரி வந்தனர்.
இந்நிலையில் கைத்தறி மற்றும் துணி நுால் துறை கூடுதல் இயக்குனர் உத்தரவில் கூறியதாவது:
கூலி நிர்ணயிக்க சேலம் சரக துணை இயக்குனர் ஸ்ரீதரன், வேலுார் சரக உதவி இயக்குனர் தமிழ்செல்வன், இளநிலை தொழில் நுட்ப உதவியாளர்கள் விருதுநகர் சரகம் ஜெகதீசன், ஈரோடு சரகம் செல்வி, திருச்செங்கோடு சரகம் தியாகராஜன் என ஐந்து பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு இலவச வேட்டி, சேலை ரகம், தர அளவீட்டை தொழில் நுட்ப ரீதியில் ஆராய்ந்து, காரணிகளை குறிப்பிட்டு, கைத்தறி, பெடல் தறி, விசைத்தறிகளில் உற்பத்தி செய்ய கூலியை பரிந்துரைக்க வேண்டும்.
இதற்கான அறிக்கையை வரும், 16 க்குள் இயக்குனரகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.